பாதயாத்திரை செல்ல தடையா…? முருக பக்தர்களே உஷார்...!

By Raghupati R  |  First Published Jan 7, 2022, 1:59 PM IST

தமிழகத்தில் ஊரடங்கு விதித்து இருப்பதால், முருகன் கோவில்களுக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் கவலையில் இருக்கின்றனர். 


அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் நடைபெறும் முதன்மையான திருவிழா தைப்பூச விழாவாகும். இவ்விழாவின் முக்கிய அம்சமே பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்து முருகப்பெருமானுக்கு பல்வேறு நேர்த்திக்கடன்கள் செலுத்தி வழிபடுவார்கள்.  இந்த வருடம் தைப்பூசத்திருவிழா வருகிற 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 18-ந் தேதி தைப்பூசத் தேரோட்டம் நடக்கிறது. 

Tap to resize

Latest Videos

விழாவை முன்னிட்டு தற்போதே பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனர். சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து சாரைசாரையாக பக்தர்கள் வருகின்றனர். கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாது வரும் பக்தர்கள் இரவு நேரங்களில் ஆங்காங்கே கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சத்திரங்களில் தங்கி விட்டு பின்னர் மீண்டும் பாதயாத்திரையாக நடந்து செல்கின்றனர். பக்தர்களுக்காக பல்வேறு இடங்களில் அன்னதானம், மருத்துவ முகாம் உள்ளிட்டவையும் நடைபெற்று வருகின்றன. தற்போது கொரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் அடைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக வருபவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக இரவு நேர ஊரடங்கால் அவர்கள் எங்கும் தங்க முடியாது. ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக பாத யாத்திரை வரும் பக்தர்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று முதல் 3 நாட்கள் தொடர்ந்து கோவில்கள் அடைக்கப்படும் என்பதை அறிந்தவுடன் நேற்று பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக வந்தவர்கள் இடையிலேயே பஸ்சில் ஏறி பழனிக்கு வந்தனர். 

அவர்கள் கோவிலில் அவசர அவசரமாக சாமி தரிசனம் செய்து விட்டு இரவு 10 மணிக்கு மேல் பஸ் இருக்காது என்பதால் உடனே தங்கள் ஊருக்கு திரும்பினர். இதனால் பழனி கோவிலில் நேற்று இரவு சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்ததால் திருவிழா போல கூட்டம் அலைமோதியது. 

அவர்கள் ஊருக்கு செல்ல கூடுதல் பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் பல ஊர்களில் இருந்து வந்தவர்கள் இன்னும் தொடர்ந்து பாதயாத்திரையாக நடந்து வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் ஊரடங்கு தடை காலத்தில் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை குறித்து மிகுந்த கவலையடைந்துள்ளனர். 

இந்நிலையில் நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் டி.பி.சுரேஷ்குமார் நெல்லை முருக பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார். அதில், ‘ நெல்லை மாநகர பகுதியில் இரவு நேர ஊரடங்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இரவு 10 மணிக்கு வணிக நிறுவனங்கள், கடைகளை அடைக்க வேண்டும். 

பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். முருக பக்தர்கள் பாதயாத்திரையை ஊரடங்குக்கு முன்னதாக அதாவது இரவு 10 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும். அதற்கு பிறகு பாத யாத்திரை செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் தங்களுடைய பாதயாத்திரையை திட்டமிட்டு நடத்த வேண்டும்’ என்று கூறினார்.

click me!