
தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை எழும்பூர் ஆதித்தனார் மேம்பாலம் அருகே திமுக எம்.எல்.ஏக்கள் சேகர்பாபு, ரங்கநாதன், காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதேபோல் தாம்பரம் பஸ் நிலையம் அருகே திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமையில் 500க்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
குரோம்பேட்டை அருகே திமுக எம்எல்ஏ இ.கருணாநிதி தலைமையில் 200க்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியம், விடுதைலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், உள்பட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நூற்றுக்கணக்கானோர் சென்னை அண்ணா சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, கடும் பாதிப்பு ஆனது. அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
முக்கிய பகுதிகளில் அரசியல் கட்சி தலைவர்கள், மூத்த நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், சென்னை நகரம் ஸ்தம்பித்தது.