இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த மழை காரணமாக திருவாரூர் மாவட்டம் மற்றும், புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு முழுவதும் நீடித்த கன மழை- பள்ளிகளுக்கு விடுமுறை
மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாகவும் தமிழகத்தில் இடி மின்னலோடு மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன் படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழையானது கொட்டித்தீர்த்தது.
இந்தநிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த கன மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதே போல புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்றைய மழை எச்சரிக்கை
இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.