கண்ணுக்கு எட்டியும் கைக்கு எட்டாத நிலையில் ‘கல்லட்டி அருவி’; சீரமைக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை...

First Published Jun 29, 2018, 12:21 PM IST
Highlights
due to heavy rain Kallatti Falls got water tourists Request for fix the road...


நீலகிரி

தொடர்ந்து பெய்து வரும் மழையால் கல்லட்டி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனை பார்க்கும் சுற்றுலா பயணிகள் அருகில் செல்ல முடியாதவாறு இதன் பாதை இருப்பதால் அதனை சரிசெய்ய கோரியுள்ளனர்.

போன வருடம் நீலகிரி மாவட்டத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. ஆனால், இந்த வருடம் சூறாவாளிக் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

தென் மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வறட்சி நீங்கி பசுமை திரும்பி உள்ளது.

இந்த தொடர் மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி உள்ளன. ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மலை மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில், உதகைமண்டலம் மற்றும் அதன் சுற்றுவட்டாராப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் கல்லட்டி மலை பாதையில் உள்ள கல்லட்டி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டத் தொடங்கி உள்ளது.

இதனை உதகையில் இருந்து முதுமலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும், கர்நாடகம், கேரளம் மற்றும் வட மாநிலங்களிலிருந்து ஊட்டியை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.

இந்த அருவியை தொலைவில் இருந்து மட்டுமே காண்பதால் கண்ணுக்கு எட்டியது கைக்கு எட்டவில்லையே என்று சுற்றுலாப் பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

ஏனெனில், அருவிக்கு  செல்ல அமைக்கப்பட்டுள்ள சாலை போதிய பராமரிப்பு இன்றி இருக்கிறது. மேலும் அங்கு நடைபாதையின் இருபுறமும் புதர்கள் வளர்ந்துள்ளதாலும் சுற்றுலா பயணிகள் அருவிக்கு நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, கல்லட்டி அருவியை தமிழக சுற்றுலாத்துறை எடுத்து அதனை மேம்படுத்த வேண்டும்” என்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

click me!