
திருப்பூரில் பெண்கள் உண்ணாவிரதம் இருந்து மூடிய சாராயக் கடையை மீண்டும் திறக்கக் கோரி குடிகாரர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘வேண்டும்! வேண்டும்!! எங்கள் பகுதிக்கு சாராயக் கடை வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினர்.
திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பேரூராட்சியில் எந்த இடத்திலும் டாஸ்மாக் சாராயக் கடை இருக்கக் கூடாது என்று கூறி இப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆனால், மக்களின் எதிர்ப்பை மீறி இந்தப் பேரூராட்சிக்கு உள்பட்ட காளிபாளையம் கிராமத்தில் கடந்த வாரம் டாஸ்மாக் சாராயக் கடையை அதிகாரிகள் திறந்து வைத்தனர். இதனால், பெரும் அதிர்ச்சி அடைந்த மக்கள், அந்த சாராயக் கடையை மூடியே ஆகனும் என்று கடந்த ஒரு வாரமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆவேசம் அடைந்த மக்கள், கடந்த 18–ஆம் தேதி காலை சாமளாபுரத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை மாவட்ட டாஸ்மாக் சாராயக் கடை மேலாளர் துரை, பல்லடம் தாசில்தார் சாந்தி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “டாஸ்மாக் சாராயக் கடை நிரந்தரமாக மூடப்படும் வரை உண்ணாவிரதத்தை கைவிடமாட்டோம்” என்று மக்கள் கராராக தெரிவித்து விட்டனர்.
இதனால் அதிகாரிகள் அன்றிரவே கடையை மூடிவிடுவதாக கூறினார்கள். அதன்படி காளிபாளையத்தில் செயல்பட்டு வந்த அந்த டாஸ்மாக் சாராயக் கடை நிரந்தரமாக மூடப்பட்டது. உண்ணாவிரதப் போராட்டமும் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் காளிபாளையம் டாஸ்மாக் சாராயக் கடை மூடப்பட்டதை அறிந்த அந்தப் பகுதியை சேர்ந்த குடிகாரர்கள் கோபம் கொண்டு 100–க்கும் மேற்பட்டோர் ஒன்றாக திரண்டனர்.
அவர்கள் அனைவரும் நேற்று காலை 10 மணியளவில் டாஸ்மாக் சாராயக் கடையை மூடக்கோரி மக்கள் எந்த இடத்தில் உண்ணாவிரதம் இருந்தார்களோ, அந்த இடத்துக்கு எதிரே, உட்கார்ந்தனர்.
பிளாஸ்டிக் நாற்காலியைப் போட்டு உட்கார்ந்து கொண்டு காளிப்பாளையத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் அதுவரை காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வோம் என்றும் அறிவித்துவிட்டு போராட்டத்தைத் தொடங்கினர்.
அப்போது ‘வேண்டும்! வேண்டும்!! எங்கள் பகுதிக்கு சாராயக் கடை வேண்டும். டாஸ்மாக் கடையை திறக்கும் வரை அறவழியில் போராடுவோம்’ என்று முழக்கங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இதுபற்றி தகவலறிந்த மங்கலம் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து வந்து, குடிகாரர்காளிடம் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு சமாதானம் அடைந்தனர்.
அப்போது குடிகாரர்கள் கூறியது: “எங்கள் பகுதியில் விசைத்தறி தொழிலாளிகள் அதிகம் வசிக்கிறோம். உடல் அசதியை போக்குவதற்காக தினமும் நாங்கள் சாராயம் குடித்து பழகிவிட்டோம். எங்கள் பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடை இல்லாததால் பல கிலோ மீட்டர் தூரம் சென்று சாராயம் குடிக்க வேண்டி உள்ளது.
இதனைப் பயன்படுத்தி சிலர் மங்கலம், காசிக்கவுண்டன்புதூர் போன்ற பகுதிக்குச் சென்று, மொத்தமாக சாராயம் வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்கிறார்கள். எங்களால் அந்த அளவிற்கு கூடுதல் விலை கொடுத்து சாராயம் வாங்க முடியவில்லை. எனவே, மூடப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடையை மீண்டும் திறக்க வேண்டும்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர்.
அதற்கு காவலாளர்கள், “உங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுங்கள். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். அதுவரை போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள்” என்று அறிவுரைக் கூறினர்.
இதனைத் தொடர்ந்து குடிகாரர்கள் அனைவரும் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டனர். பின்னர், அங்கிருந்து ஒரு வாடகை வாகனத்தை பிடித்து அனைவரும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு, தங்கள் பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.