
தூத்துக்குடியில் உள்ள பள்ளி ஒன்றில் சந்தேகம் கேட்கும் மாணவர்களை ஆசிரியை ஒருவர் அவதூறாக பேசுவதாகவும், வகுப்பறையில் செல்போனில் பாட்டு கேட்பதாகவும் மாணவர்கள் பெற்றொரிடத்தில் கூறியதையடுத்து பிள்ளைகளுடன் பெற்றொர் போராட்டத்தில் இறங்கினர்.
தூத்துகுடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வடக்கு செமபுதூரில் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. இந்தப் பள்ளிக் கூடத்தில் 76 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு ஆறு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
இங்குப் பணி புரியும் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் அடிக்கடி செல்போனில் பாட்டு கேட்பதாகவும், பாடங்களில் சந்தேகம் கேட்கும் மாணவர்களை அவதூறாக பேசுவதாகவும் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடத்தில் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து நேற்று காலை அந்த ஆசிரியரின் வகுப்புக்கு மட்டும் மாணவ, மாணவிகளை அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். அந்த ஆசிரியையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி பள்ளிக்கூடத்தின் முன்பு மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த கோவில்பட்டி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாணிக்கம், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த ஆசிரியை குறித்து எழுத்துப் பூர்வமாக புகார் கடிதம் எழுதி தருமாறு பெற்றோர்களிடம் கேட்டதையடுத்து அவர்களும் புகார் கடிதம் கொடுத்தனர்.
கடிதத்தை பெற்றுக்கொண்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அந்த ஆசிரியையை இடமாற்றம் செய்ய ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
இதனையடுத்து பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினர்.