
ஓடும் பஸ்சில் டிரைவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். பஸ்சை பாதுகாப்பாக நிறுத்தியதால் 50 பயணிகள் உயிர் தப்பினர். இறக்கும் நேரத்திலும் தங்களை காப்பாற்றிய டிரைவரை பார்த்து பயணிகள் கண்ணீர் விட்டு அழுதனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள கரிம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் ஆந்திர மாநில போக்குவரத்து துறையில் 15 ஆண்டுகளாக டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ராணி என்ற மனைவியும் விஷால், நிவாஸ் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை டிரைவர் அருணாசலம் திருமலையில் இருந்து சென்னை கோயம்பேடுக்கு பஸ்சை ஓட்டி வந்துள்ளார். இரவு மீண்டும் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருமலைக்கு பஸ்சை ஓட்டி சென்றார். அந்த பயணத்தின் போது பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர். பஸ் செங்குன்றத்தை அடைந்தபோது அருணாசலத்துக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனே, அவர் செங்குன்றம் பஸ் நிலையம் அருகே பஸ்சை நிறுத்தி அங்குள்ள மெடிக்கலில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டார். பின்னர் பஸ் புறப்பட்டது. இரவு 7 மணிக்கு பஸ் ஊத்துக்கோட்டையில் ஐந்து நிமிடம் நின்று விட்டு திருமலைக்கு புறப்பட்டது.
ஊத்துக்கோட்டை அருகே டிரைவர் அருணாசலத்துக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது. அங்கு சாலையோரமாக பஸ்சை நிறுத்திய டிரைவர் அருணாசலம் அங்குள்ள மெடிக்கலில் மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டார். அதன் பின்னர் சுமார் 100 மீட்டர் சென்றதும் பஸ்சை சாலையோரம் நிறுத்தி விட்டு ஸ்டீயரிங் மீது சாய்ந்தார். அங்கேயே அவர் இறந்து விட்டதும் தெரியவந்தது. இறக்கும் நேரத்திலும் தங்களை காப்பாற்றிய டிரைவரை பார்த்து பயணிகள் கண்ணீர் விட்டு அழுதனர்.