
திண்டுக்கல்
திண்டுக்கல்லில், பத்து நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லாததால் குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராடினர்.
திண்டிக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் சந்தையூர் ஊராட்சி தெற்குவலையபட்டியில் 500 குடியிருப்புகள் உள்ளன.
இங்கு வாழும் மக்களுக்கு அந்தப் பகுதியில் இரண்டு ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. சீரான மழை பொழிவு இல்லாததால் ஒரு ஆழ்துளை கிணறு முற்றிலும் வறண்டு விட்டது.
மற்றொரு ஆழ்துளை கிணற்றில் குறைந்த அளவே தண்ணீர் இருப்பதால் அப்பகுதி மக்களுக்கு பத்து நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த குடிநீர் அவர்களுக்கு போதுமானதாக இல்லாததால் தண்ணீரை தேடி கிராம மக்கள் அலைய வேண்டி உள்ளது. மேலும், குடிநீரை விலைக்கு வாங்கும் அவல நிலைக்கும் அவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குமுறுகின்றனர் அவர்கள்.
எனவே, அந்த கிராம மக்கள் வத்தலக்குண்டு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, அதிகாரிகள் செல்லும் வழியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலர் பணி சம்பந்தம்மாக வெளியில் சென்றிருப்பதாகவும், அவர் வந்தவுடன் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட அம்மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.