
மதுரை
மதுரையில், குடிநீர் கேட்டு சாலை மறியல் செய்த மக்கள், ஆழ்துளைக் கிணறுகளை, மீண்டும் தூர்வாரினால் எங்களுக்குத் தேவையான குடிநீர் கிடைத்துவிடும், பற்றாக்குறையும் ஏற்படாது. அதனை அதிகாரிகள் செய்ய மறுக்கின்றனர் என்று குற்றம் சாட்டினர்.
மதுரை மாவட்டம், சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் திருமாணிக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட டி.ராமநாதபுரத்தில் கடந்த ஐந்து மாதங்களாக கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில் கடந்த ஐந்து நாள்களாக குடிநீர் முற்றிலும் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் குடிநீருக்காக கடும் அவதியடைந்தனர்.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்தும், அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததோடு, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நேற்று டி.ராமநாதபுரத்தைச் சேர்ந்த மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வெற்றுக் குடங்களுடன், டி.ராமநாதபுரம் - எம்.கல்லுப்பட்டி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்துத் தடைப்பட்டது.
இதுபற்றி அந்த பகுதி மக்கள் கூறியது:
“ஏற்கனவே இருக்கிற ஆழ்துளைக் கிணறுகளை, மீண்டும் தூர்வாரினால் இந்தப் பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் கிடைத்துவிடும், பற்றாக்குறையும் ஏற்படாது.
மேலும், கூட்டுக் குடிநீர் சரிவர கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் இந்தப் பகுதிகளில் உள்ள சிலர் தங்கள் தேவைக்கு குடிநீரை எடுத்துக் கொண்டு, ஊருக்குள் வரும் குடிநீர் குழாயை அடைத்து விடுகின்றனர். இதுபோன்ற தனி அதிகாரம் படைத்த சிலரின் நடவடிக்கைகளை அதிகாரிகள் கண்டிப்பதில்லை.
இதைக் கண்டித்தும், அந்த முறைகேடுகளை அதிகாரிகள் தடுத்து, எங்களுக்கு முறையாக குடிநீர் வழங்ககோரியும் நாங்கள் இந்த சாலைமறியல் போராட்டத்தை நடத்துகிறோம்” என்று அவர்கள் கூறினர்.
இந்த போராட்டம் குறித்த தகவலறிந்ததும் அலறியடித்து ஓடிவந்த டி.ராமநாதபுரம் காவலாளர்கள், ஊராட்சிச் செயலர் வீரேஷ் ஆகியோர் மக்களிடம் பணிவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, “விரைவில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்” எனக் கூறினர். அதனை ஏற்றுக் கொண்ட மக்கள் சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடுகிறோம் என்று எச்சரிக்கை விடுத்து கலைந்துச் சென்றனர்.