
ஆதார் அட்டை வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே, ஜூன், 1 ஆம் தேதி முதல் மானிய விலையில் உரங்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு, விவசாயிகளுக்கு மானிய விலையில், உரங்களை வழங்கி வருகிறது. தமிழகத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மட்டுமின்றி, தனியார் மூலமாகவும், உரங்கள் வினியோகம் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெறும் முறை கேடுகளை தடுக்க ஆதார் அட்டை முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் என்ற பெயரில், மானிய விலையில் உரங்களை பெறும் பலர், அதை பட்டாசு தயாரிப்பு உள்ளிட்ட, பல நிறுவனங்களுக்கு விற்றுவிடுகின்றனர்.
இதனால், மத்திய அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்படுவதோடு, தகுதியான விவசாயிகளுக்கு உரங்கள் கிடைப்பதில்லை.
இதையடுத்து, ஆதார் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டும் உரங்களை வழங்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்காக, கையடக்க எலக்ட்ரானிக் கருவிகள் வாங்கப்பட்டு உள்ளன. ஜூன், 1 ஆம் தேதி முதல் , இந்த கருவிகளில், விவசாயிகளின் ஆதார் அட்டை எண் அல்லது கைரேகையை பதிவு செய்த பின்னே, உரங்கள் வழங்கப்பட உள்ளன.
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில், இந்த நடைமுறை ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில், ஜூன், 1 ஆம் தேதி அமலுக்கு வருகிறது.