'அப்போலோ ரெட்டி உட்பட அனைவருக்கும் நோட்டீஸ்' - ஜெ. மரணத்தில் சந்தேகம்... நீதிபதி அதிரடி..!!

First Published Dec 29, 2016, 5:50 PM IST
Highlights


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் தனி ஒரு மனிதனாக தனக்கும் சந்தேகம் இருப்பதாக அதிரடியாக கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற நீதிபதி, அனைத்து அரசு உயர் அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு மற்றும்  அப்போலோ மருத்துவமனை குழும தலைவர்  பிரதாப் சி ரெட்டிக்கும் நோட்டீஸ் அனுப்ப மனுதாரருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து மூன்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் ,  வழக்கு முடியும் வரை, ஜெயலலிதாவின் சிகிச்சை மற்றும் மரணம் தொடர்பான அறிக்கைகள், ஆவணங்கள், மருத்துவமனை அறிக்கைகள், அவரது கைரேகை உள்ளிட்ட அனைத்தையும் பாதுகாப்பதற்காக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்  என  அரும்பாக்கத்தை சேர்ந்த அதிமுக தொண்டர் பி.ஏ.ஜோசப் என்பவர்  பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு கிறிஸ்துமஸ் விடுமுறை கால நீதிமன்ற நீதிபதிகள் எஸ்..வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி ஆஜராகி, இந்த மனுவை  விசாரணைக்கு எடுக்க  கூடாது, என்றும்  விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் வாதாடினார். 

இதற்கு முன்னர் மருத்துவ அறிக்கைகள் கேட்டு டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் பிரவீனா ஆகியோர் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் ஏதும் இல்லை எனவும், முழுமையாக உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும்  தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், மருத்துவ அறிக்கைகள் கேட்பது என்பதும், மரணத்தில் சந்தேகம் உள்ளது என்பதும் வேறு வேறு  என தெரிவித்தார். மேலும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் தொடர்பாக சர்ச்சை கிளம்பியபோது, குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

 மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மதன கோபால ராவ், இந்த வழக்கு குறித்து நோட்டீஸ் எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார், அப்போது நீதிபதி எஸ்.வைத்தியநாதன் குறுக்கிட்டு, முன்னாள் முதல்வர் ஒருவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பலர் வந்து பார்த்து சென்றுள்ளீர்கள், ஆனால் அது தொடர்பாக எந்த தகவலோ, அறிக்கையோ கூட வெளியிடவில்லை, ரகசியமாகவே வைத்து வாயை மூடிக்கொண்டு இருந்துள்ளிர்கள் , அதற்கான காரணம் உங்களுக்குதான் தெரியும் என கூறினார்.

 முன்னாள் முதல்வர் குணமடைந்து வருகிறார்; உணவு சாப்பிடுகிறார்; நடைப் பயிற்சி மேற்கொள்கிறார் என, செய்திகள் வெளியாகின. ஆனால், திடீரென அவர் மரணம் அடைந்தார் என அறிவித்தால், அனைவருக்கும் சந்தேகம் வரத்தான் செய்யும். அவர்கள் சந்தேகத்தை புகாராகவும், வழக்காகவும் தொடர அனைவருக்கும் உரிமையுள்ளது. 

அவரை பார்க்க அவரது குடும்ப உறவுகளை கூட அனுமதிக்கவில்லை. ஆனால் அவர்கள் நீதிமன்றத்தை அணுகவில்லை.  ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து முழுமையான தகவல்களை அரசு வெளியிடவில்லை என மக்கள் கூறினால், இந்த சந்தேகங்களை மத்திய அரசோ, மாநில அரசோ நிவர்த்தி செய்திருக்க வேண்டும். 

மருத்துவமனை வெளியிட்ட அறிக்கைகள் தான் ஊடகத்தில் வெளியிடப்பட்டன. அவற்றை பார்க்கும்போது, நீதிபதி என்ற முறையில் இல்லாமல் தனி ஒருவன் என்ற முறையில் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எனக்கும் சந்தேகம் உள்ளது. 

இதேபோல எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது கூட அவரது வீடியோ வெளியிடப்பட்டன. ஆனால் இப்போது புகைப்படம் கூட ஏன் வெளியிடவில்லை?

இருந்தாலும் அவர் இறந்த பிறகு கூட சிகிச்சை படங்கள் இல்லை. மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி வழக்கு என்னிடம் வந்திருந்தால், ஏன் ஆர்.டி.ஓ விசாரிக்கவில்லை என கேள்வி எழுப்புவது மட்டுமல்லாமல், தேவைப்பட்டால் உடலை தோண்டி எடுக்கவும் உத்தரவிட்டிருப்பேன். 

 இந்த மனு தொடர்பாக பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை, மத்திய உள்துறை , மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை, சிபிஐ, தமிழக அரசு தலைமை செயலாளர், தமிழக உள்துறை செயலாளர், தமிழக சட்டத்துறை செயலாளர், சட்டப்பேரவை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை  வரும் ஜனவரி  9ம் தேதிக்கு  ஒத்திவைத்தனர்.

மேலும் வழக்கில் தமிழக டிஜிபி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கும்  நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி  அப்பல்லோ மருத்தவமனை தலைவருக்கு மனுதாரர் தரப்பில் நோட்டீஸ் அனுப்ப அனுமதி அளித்தார். 

click me!