தொடர் தோல்விகளை சந்தித்து வரும் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர் ஒருவர் பூங்கொத்து கொடுத்து கவலைப்படாதீங்க, 2026ஆம் ஆண்டு அதிமுக தான் ஆட்சிக்கு வரும் என கூறி உற்சாகப்படுத்தினார்.
அதிமுக தொடர் தோல்வி- தொண்டர்கள் அதிருப்தி
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களும் தோல்வியே பரிசாக கிடைத்தது. குறிப்பாக எடப்பாடி பழனாசி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல்,சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அடுத்தடுத்து 9 தோல்விகளை சந்தித்துள்ளது. இதனால் அதிமுக தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கட்சியில் ஒற்றுமை இல்லாமல் வாக்குகள் சிதறுவது தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம் என கூறி வருகின்றனர்.
இந்தநிலையில் மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் அவரை வரவேற்க மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டத்தில் இருந்து அதிமுக நிர்வாகிகள் மதுரை விமான நிலையம் வருகை தந்தனர்.
கவலைப்படாதீங்க..
அப்போது மதுரை விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக தொண்டர்கள் பூங்கொத்து மற்றும் பொன்னாடை வழங்கி வரவேற்றனர். அப்போது ஒரு தொண்டர் கவலைப்படாதீர்கள் 2026 நம்ம தான் என கூறினார் இதற்கு சிரித்தபடியே எடப்பாடி பழனிச்சாமி கடந்து சென்றார்.
மேலும் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்க மதுரை விமான பயணிகள் வெளியே வரும் பாதை அருகே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜ் வருகை தந்த பின்னர் வாகனம் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வாகனத்தை அப்புறப்படுத்துமாறு விமான நிலைய அதிகாரி கூறினார். இல்லை என்றால் லாக் செய்து விடுவதாக கூறியதை தொடர்ந்து அதிமுகவினருக்கும் விமான நிலைய அதிகாரிகளும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.