
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரா சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னடம் எனும் மொழி பிறப்பதற்கும், கர்நாடகா எனும் மாநிலம் பிறப்பதற்கும் முன்பிருந்தே, காவிரிக்கும், தமிழ்நாட்டுக்கும் வரலாற்றுவழி உயிர்த்தொடர்பு இருக்கிறது. அதனை முற்றாக அறுத்து, உலக நதிநீர் பங்கீட்டு விதிகளுக்கு நேர்மாறாக, காவிரி நதிநீர் உரிமையை கர்நாடகத்துக்கு மட்டுமானதாக உரிமை கொண்டாடத் துடிக்கும் சூழ்ச்சியின் வெளிப்பாடே மேகதாதுவில் அணைகட்டும் வஞ்சகச்செயல். அதனை தமிழர்கள் நாங்கள் தட்டிக் கேட்காது, வேறு யார் கேட்பார்? காவிரியில் தமிழர்கள் எங்களுக்கில்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கிறது?
காவிரி நதிநீர் உரிமை என்ன கர்நாடகத்துக்கு மட்டுமான சொத்தா? ஒரு ஆற்றின் தலைப்பகுதியில் வாழ்பவர்களைவிட கடைமடைப் பகுதியில் வாழ்பவர்களுக்கே ஆற்றின் மீது அதிக உரிமை எனும் நதிநீர் பங்கீட்டு விதிகளின்படி, காவிரியின் மீது கர்நாடகத்தைவிட தமிழ்நாட்டுக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. அப்படியிருக்கையில், டி.கே.சிவக்குமாரின் பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடு. அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆகவே, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் ஆணவப்பேச்சை முதல்வர் விஜய் அவர்கள் கண்டித்து, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழ்நாட்டு அரசின் சார்பாக எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.