
பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிடுவதாக மருத்துவர்கள் உறுதியளித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ மேற்படிப்பில் 50 % இட ஒதுக்கீட்டை ரத்து செய்து மருத்துவ கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டது.
மருத்துவ மேற்படிப்பில் 50 % இட ஒதுக்கீடு ரத்தை தடை செய்து உத்தரவிட்டகோரி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில் மருத்துவ மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மாநில அரசுக்கு நீதிபதிகள் பரிந்துரை செய்தனர்.
இந்நிலையில், இதுகுறித்த பேச்சுவார்த்தை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, மருத்துவர்களின் கோரிக்கையும் தமிழக அரசின் கோரிக்கையும் ஒன்றுதான் எனவும், தமிழக அரசின் நிலையை மருத்துவர்களிடம் எடுத்து கூறியதாகவும் தெரிவித்தார்.
மேலும் மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் எனவும், மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த பேட்டியின்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் உடன் இருந்தார்.