ஈரமில்லையா மோடி உங்களுக்கு?

 
Published : Apr 25, 2017, 10:04 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
ஈரமில்லையா மோடி உங்களுக்கு?

சுருக்கம்

Cultivation of water crops in the nationalized banks crop loan disbursement and relief for drought are acceptable

“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை’’ என்பது வான்புகழ் கொண்ட வள்ளுவனின் அழியா வாக்காகும்.

உலகத்தில் எத்தனை தொழில்கள் இருந்தாலும், அவை உழவுத் தொழிலைச் சுற்றியே வரவேண்டும் என்று இந்த குறளின் உண்மை நிலை, ஏன் இன்னும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு இன்னும் புரியவில்லை எனத் தெரியவில்லை!.

நதி நீர் இணைப்பு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன் தள்ளுபடி, வறட்சிக்கு உரிய நிவாரணம் போன்றவை ஏற்றுக்கொள்ளக்கூடிய கோரிக்கை தானே.

தமிழகம் கடந்த 3 ஆண்டுகளாக வறட்சியின் கோர பற்களுக்குள் சிக்கி நைந்து வருகிறது. காவிரியில் இருந்து உரிய நீரை மத்தியஅரசு பெற்றுத்தர மறுத்ததால் தானே நமது விவசாயிகள் வறட்சியிலும் வறுமையிலும், நஷ்டத்திலும் விழுந்தார்கள்.

விவசாயி அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 41 நாட்களாக விவசாயிகள் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளின் பிம்பத்தை வெளிக்காட்டி போராடினார்கள். உணவு உண்ணும் அத்தனை மக்களும், உண்மை விளம்பும் ஊடகங்களும் செவி மெடுத்தாகிவிட்டது. ஆனால், ஏனோ பிரதமர் மோடி மட்டும் இன்று வரை பாரா முகமாக இருந்து வருகிறார்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் வெவ்வேறு பெயர் வைத்து கடன் தள்ளுபடி செய்யும் மத்தியஅரசு, ஆதயமே பெற முடியாது என்பதாலோ என்னவோ, நமது ஏழை விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.

காவிரி நீர் மேலாண்மை வாரியம் இதுவரை அமைக்கவில்லை, 200 விவசாயிகள் மாண்டும், தற்கொலையைத் தடுக்க நீண்ட காலத் திட்டம் இல்லை, டெல்டா பகுதியை நஞ்சாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் என பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது.

வறட்சிக்கும், வர்தா புயலுக்கும் சொற்ப தொகையை தூக்கி எறிந்து கடமை முடிந்தது என மோடி அரசு தமிழகத்தை கை கழுவி விட்டது.

அரை நிர்வாணத்துடன், எலிக்கறி, பாம்புகறி தின்று எங்களது விவசாயிகள் போராடுவதை பார்த்து இரக்கம் வரவில்லையா? என நாடாளுமன்றத்தில் கேள்வியும் கேட்கப்பட்டுவிட்டது. ஆனால், தீர்மானமாய் தள்ளுபடி இல்லை என ஈரமில்லாமல் சொல்லிவிட்டது மோடி அரசு.

ஆனால், ‘செல்லப்பிள்ளை’ உத்தரப்பிரதேசத்தில் மட்டும் பா.ஜனதா அரசு ஆட்சிப் பொறுப்பு ஏற்று ஒரு மாதம் நிறைவடைவதற்குள் ரூ.36 ஆயிரத்து 500 கோடி பயிர்கடனை தள்ளுபடி செய்யும் பொறுப்பை மத்திய அரசே ஏற்றுள்ளது. ஒரே நாட்டில் இருக்கும் மாநிலங்களை இப்படியா மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவது?

விவசாயிகளின் கோரிக்கைக்குதான் மோடி மனம் இரங்கவில்லை, ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்ச்சிப் போராட்டத்துக்கு செவி சாய்ப்பார் என்று கருதியே நேற்று மாநிலம் தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

சோறு போடும் விவசாயிகளின் வயிறு காயக்கூடாது என்பதற்காக ஒட்டு மொத்த தமிழக மக்களும், பெரும்பாலான கட்சிகளும், பல்வேறு பிரிவினரும் போராட்டத்தை வெற்றிகரமாக மாற்றி இருக்கிறார்கள். நாட்டின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார்கள்.

2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று மோடி வாக்குறுதி மட்டும் கொடுத்தால் போதாது. விவசாயிகளின் துயரங்களையும் கண்திறந்து பார்க்க வேண்டும்.

எங்கள் விவசாயிகள் மத்திய அரசிடம் ‘மீன் கேட்கவில்லை, தூண்டில்தான்’ கேட்கிறார்கள். உரிமையான நதி நீர், முறையான நீர்பாசன திட்டம், உற்பத்தி பொருளுக்கு உரியவிலை, சந்தை, சேமிப்பு கிடங்கு என நீண்ட கால திட்டங்களைத்தான் கேட்கிறார்கள்.

இந்த கவனஈர்ப்பு போராட்டத்துக்கு பின்பும் பிரதமர் மோடி தனது கண்களை தமிழக விவசாயிகள் மீது திருப்புவார் என எதிர்பார்ப்போம்.

இல்லாவிட்டால், ஜல்லிக்கட்டுக்காக உருவான மெரீனா புரட்சி போல், விவசாயிகளுக்காக மீண்டும் ஒரு தன் எழுச்சிப் போராட்டத்தை தமிழர்கள் நடத்த தயங்கமாட்டார்கள்.

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!