
வடகிழக்குப் பருவமழையின்போது, முன்னேற்பாடாக ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி, தொழில் நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இதற்கு ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமை தாங்கினார்.
“பருவமழையின்போது, தொழில் நிறுவனங்கள், சமூகப் பொறுப்புத் திட்டத்தின் மூலம் தங்களது பகுதிகளுக்குத் தேவையான உதவிகளை செய்ய முன் வர வேண்டும்.
மேலும், தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.
வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், பாதிப்புக்குப் பின் தங்களது பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள பங்களிப்பு அளிக்க வேண்டும்” என்று ஆட்சியர் எ.சுந்தவரவல்லி, தொழில் நிறுவன பிரதிநிதிகளை வேண்டிக் கேட்டுக் கொண்டார்.