
போளூர்,
போளூரில் இரயில்வே மேம்பாலம் வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து மேம்பாலம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
திருவண்ணாமலை – வேலூர் பிரதான சாலை போளூர் நகரில் இரயில்வே கேட் உள்ளது. நகரின் முக்கிய பகுதியில் இரயில்வே கேட் இருப்பதால் இரயில்கள் இந்த பகுதியை கடக்கும்போது போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே இரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து இரயில்வே மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. விரைவில் மேம்பால பணிகள் ஆரம்பமாக உள்ளது. இரயில்வே மேம்பாலம் கட்டும்போது போக்குவரத்து பாதிக்கப்படும். எனவே, போளூரில் இருந்து வேலூர் செல்லும் வாகனங்கள் எந்த வழியாக செல்வது, வேலூர் மற்றும் சேத்துப்பட்டு மார்க்கமாக வரும் வாகனங்கள் எந்த வழியாக செல்வது என்பது குறித்த ஆய்வுப்பணி நடந்தது.
திருவண்ணாமலை உதவி ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில் போளூர் தாசில்தார் புவனேஸ்வரி, துணை தாசில்தார் செந்தில்குமார், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ஜெயசேகர், உதவி கோட்ட பொறியாளர் பாலசுப்ரமணியன், இரயில்வே உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், முதுநிலை பொறியாளர் மனோகரன், துணை காவல் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் ஆய்வு பணியை மேற்கொண்டனர்.
போளூர் நகரத்தில் இருந்து வேலூர், காஞ்சீபுரம், ஆரணி, வந்தவாசி, சென்னை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் இனி திருவண்ணாமலை செல்லும் மார்க்கமாக வந்து பைபாஸ் சாலையை அடைந்து அந்த சாலை வழியாக செல்ல வேண்டும்.
அதேபோல் வேலூர், சென்னை, வந்தவாசி, சேத்துப்பட்டு மார்க்கமாக வரும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் பைபாஸ் சாலையை சுற்றிக்கொண்டு திருவண்ணாமலை சாலை மார்க்கமாக போளூர் நகரக்குள் வர வேண்டும்.
போளூர் இரயில்வே கேட் பணி விரைவில் தொடங்க உள்ளதால் முற்றிலுமாக கேட் உள்ள பகுதி அடைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் முதலில் பணி தொடங்க உள்ளதாகவும், பிறகுதான் நெடுஞ்சாலை துறை இடத்தில் பணிகள் தொடங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.