கமலை நேரில் சந்திக்க கூடாது! மிரட்டப்பட்ட நல் ஆசிரியர் பகவான்! கல்வித்துறை அதிகாரிகள் அடாவடி!

First Published Jul 21, 2018, 4:24 PM IST
Highlights
Do not meet Kamal in person Teacher Bagavan Threat


திருவள்ளூர் அருகே அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் அன்பை பெற்று, தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரபலமான ஆசிரியர் கோவிந்த் பகவான், நடிகர் கமல்ஹாசனை சந்திக்க மறுத்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கோவிந்த் பகவான். அவருக்கு அண்மையில் பணிமாறுதல் குறித்த ஆணை வந்தது. இதை மாணவ, மாணவிகளிடம் தெரிவித்ததும், சமுத்திரகனி நடித்த சாட்டை படம்போல, ஆசிரியர் கோவிந்த் பகவானை மாணவ, மாணவிகள் சுற்றிவளைத்து, “நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம், இங்கேயே இருங்கள்” என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர். ஆனால், அரசு ஆணையை சுட்டிக்காட்டிய ஆசிரியர் பகவான், பணிமாறுதல் செய்தே ஆக வேண்டும் என்றும் விளக்கினார். ஆனால் மாணவ, மாணவிகள் விடப்பிடியாக இருந்தனர். 

ஆசிரியரை பகவானை மாணவ, மாணவிகள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த காட்சிகள், ஊடகங்களில் மட்டுமின்றி, சமூகவலைதளங்களில் வெளியாகி பல பொதுமக்களிடையேயும், ஆசிரியர்களிடையேயும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த காட்சிகளை கண்ட பலர் அரசுக்கு கோரிக்கை விடுத்ததை அடுத்து, தமிழக அரசும் ஆசிரியர் பகவானின் பணிமாறுதலை நிறுத்திவைத்தது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், ஆசிரியர் பகவானை சந்தித்து பாராட்ட நினைத்துள்ளார். இதற்காக ஆசிரியர் பகவானை மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் அணுகியுள்ளனர். பகவானும் கமலை சந்திக்க ஒப்புக் கொண்டதாக சொல்லப்படுகிறது. உடனடியாக கடந்த வியாழக்கிழமை சென்னை அழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் கமலை ஆசிரியர் பகவான் சந்திக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் இதற்காக, செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தனர்.

செய்தியாளர்களும் குறிப்பிட்ட நேரத்துக்குப் போய் கூடிய நிலையில், திடீரென செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இது குறித்து கேட்டபோதுதான், கமல்ஹாசனை ஆசிரியர் பகவான் சந்திக்க மறுத்த தகவல் தெரியவந்துள்ளது. முதலில் வருவதாக ஒப்புக் கொண்ட ஆசிரியர் பகவன் திடீரென பின்வாங்கியதற்கு கல்வித்துறை அதிகாரிகளின் மிரட்டல் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. அரசியல் கட்சித்தலைவரான கமலை சந்தித்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் ஆசிரியர் பகவானை எச்சரித்துள்ளனர். இதன் காரணமாகவே கமலை சந்திக்க வராமல் தவிர்த்துள்ளார் பகவான்.

இது குறித்து, ஆசிரியர் பகவானை செய்தியாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோதுதான், விஷயம் தெரியவந்தது. கேரளாவில் ரப்பர் மரத்தில் பால் எடுக்கும் தொழிலாளி, மிக இனிமையாக பாடியதை சமூகவலைதளங்களில் பார்த்து, அவரை சென்னைக்கு வரவழைத்து, கவுரப்படுத்திய கமல்ஹாசன், அதே பாணியில் ஆசிரியர் பகவானையும் அணுகியுள்ளார். ஆனால், ஆசிரியர் பகவானோ, ”நான் பார்ப்பது அரசுவேலை, நடிகர் கமல்ஹாசனோ கட்சியில் இருக்கிறார். இந்த சூழலில் கமல்ஹாசனை நான் சந்தித்தால், அது அரசியல் ரீதியான அணுகுமுறையாக இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், தான் கமலை தனிப்பட்ட முறையில் சந்திப்பதில் பிரச்சனை இல்லை, ஆனால் செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தது தான் தற்போது பிரச்சனை. அரசுப் பள்ளி ஆசிரியரான நான் கமலுடன் செய்தியாளர்களை சந்தித்தால் அது விதிகளை மீறியதாகிவிடும் என்றும் அவர் கூறினார்.

click me!