
திண்டுக்கல்
வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்களில் விருப்பம் இல்லாத விவசாயிகளிடம் பயிர் காப்பீட்டு தொகை பிடித்தம் செய்யக் கூடாது என்று ஆட்சியரகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகித்தார்.
கடந்த மாதம் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலில் விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மானியம், உதவிகள் குறித்து வேளாண்மைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) மனோகரன் பேசினார்.
இதில், விவசாயிகள், "இந்த ஆண்டு ஓரளவு மழை பெய்துள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விவசாய சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. ஆனால், கரும்பு சாகுபடி மட்டும் இந்த ஆண்டு குறைந்துவிட்டது. கரும்புக்கு கட்டுப்படியான விலையை அரசு வழங்காததே இதற்கு காரணம்" என்று குற்றம் சாட்டினர்.
அதற்கு வேளாண்மை இணை இயக்குனர்,ம் "இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு கரும்புக்கு கட்டுப்படியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் கரும்பு சாகுபடி அதிகரிக்கும்" என்று தெரிவித்தார்.
"காப்பீடு செய்த பயிர்களுக்கு இன்னும் காப்பீட்டுத்தொகை கிடைக்கவில்லை" என்று விவசாயிகள் கேட்டதற்கு இணை இயக்குனர், "காப்பீடு தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. தகுதியுடையவர்களுக்கு விரைவில் காப்பீட்டு தொகை வழங்கப்படும்" என்றார்.
"எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) திண்டுக்கல்லில் நடைபெற உள்ள நிலையில், விவசாயிகளின் அடிப்படை தேவைகள், குறைகள் குறித்து எடுத்துரைத்து நிரந்தர தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் "கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகளில் கடன் வாங்கும் பட்சத்தில், விருப்பம் இல்லாத விவசாயிகளிடம் இருந்து காப்பீட்டு தொகைக்காக பிரீமியம் பிடித்தம் செய்யக்கூடாது" என்றும் விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்.
அதற்கு இணை இயக்குனர், "இது குறித்து அரசுக்கும், முதல்வருக்கும் பரிந்துரை செய்யப்படும்" என்றார்.
விவசாயிகள் "தென்னை மரத்தில் இருந்து நீராபானம் எடுக்கும் விதமாக, தென்னை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உறுப்பினர் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றதற்கு "நீராபானம் எடுக்க தனி விவசாயிக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள், தென்னை உற்பத்தியாளர் சங்கம், கூட்டுறவு சங்கங்களுக்கு நிறுவன விதிமுறை அடிப்படையில் உரிமம் வழங்கப்படும்" என்றும்,
"இந்த சங்கங்களில் விவசாயிகள் உறுப்பினர்களாக சேர வசதியாக எளிய நடைமுறைகள் வகுக்கப்படும். நீராபானம் உற்பத்தி செய்வதால் தென்னை விவசாயிகளுக்கு 10 மடங்கு வரை கூடுதலாக வருமானம் கிடைக்கும்" என்று அறிவுரை வழங்கினார் இணை இயக்குநர்.
இதனையடுத்து தங்களுடைய குறைகள், கோரிக்கைகள் குறித்து விவசாயிகள், அதிகாரிகளிடம் மனு அளித்தனர். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இந்க் கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சுரேஷ் ஸ்ரீராம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பழனிவேலு உள்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.