
காஞ்சிபுரம்
கான்ஞ்சிபுரத்தில் வேற்று மதத்தைச் சேர்ந்தவரின் சடலத்தை தங்கள் பகுதி சுடுகாட்டில் புதைக்க கூடாது என்று ஆம்பாக்கம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இறந்தவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த்வர் என்பது குறிப்பிடத்தக்க்து.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தை அடுத்த வாரணவாசி, பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் அப்பாஸ். இவரது மனைவி பாத்திமாபீபி (60). இவர், கடந்த புதன்கிழமை இறந்தார்.
இந்த நிலையில் பாத்திமாபீபியின் சடலத்தை அவரது உறவினர்கள் வாரணவாசி ஊராட்சிக்கு உள்பட்ட ஆம்பாக்கம் கிராமத்தில் உள்ள காலனி சுடுக்காட்டில் புதைப்பதற்காக நேற்று மதியம் எடுத்துச் சென்றனர்.
இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், “வேற்று மதத்தைத் சேர்ந்தவரின் சடலத்தை தங்கள் பகுதி சுடுக்காட்டில் புதைக்கக்கூடாது” எனக் கூறி எதிர்ப்புத் தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற திருபெரும்புதூர் டிஎஸ்பி சிலம்பரசன், வாலாஜாபாத் வட்டாட்சியர் சுமதி ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும், அவர்களுக்கு ஆம்பாக்கம் பகுதியில் மயானத்துக்கு தனி இடம் ஒதுக்கப்படும் என வட்டாட்சியர் சுமதி உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு மக்கள் கலைந்துச் சென்றனர்.
இதனையடுத்து இரண்டு மணி நேரத்துக்குப் பின்பு ஆம்பாக்கம் காலனி சுடுகாட்டில் பாத்திமாபீபியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
வேற்று மதத்தவரின் உடலை சுடுகாட்டில் புதைக்கக் கூடாது என்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது தீண்டாமையின் உச்சக் கட்டமாகதான் பார்க்க வேண்டும். ஊருடன் ஒத்து வாழ் என்ற மறையை பின்பற்றும் தமிழ் மண்ணில் இப்படியும் மனிதர்கள் இருப்பது மண்ணிற்கு கிடைத்த அவமானம்.