
வேலூர்
வேலூரில் ஜிஎஸ்டி குறித்து வணிகர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மத்திய உற்பத்தி, சேவை வரித் துறை, மாநில வணிகவரித் துறை சார்பில் வேலூரில் சரக்கு, சேவை வரி விதிப்பது (ஜிஎஸ்டி) குறித்து வணிகர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வுக் கூட்டத்திற்கு மத்திய உற்பத்தி, சேவை வரித் துறை கோட்டக் கண்காணிப்பாளர் ஆர்.அரசு தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசியது:
“சரக்குகளின் விற்பனை, சேவையின்போது வரிவிதிக்க வழி கொடுப்பதே ஜிஎஸ்டி சட்டமாகும்.
பல்முனை வரியை ஒருமுனை வரியாக ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதிலும் அமல்படுத்தப்பட உள்ளது.
இதில், ரூ.20 இலட்சம் வரை வணிகம் செய்யும்போது வரி விதிக்கப்பட மாட்டாது.
இந்தச் சட்டத்தில் 97 பொருள்கள், 14 சேவைகளுக்கு வரி விலக்கு உண்டு.
புதிய ஜிஎஸ்டி சட்டத்தின்படி, ரூ.50 இலட்சத்துக்குள் வணிகம் செய்பவர், வெளி மாநிலத்தில் இருந்தும் சரக்குகளை கொள்முதல் செய்யலாம்.
வாட் வரிச் சட்டத்தில் இதற்கு வழியில்லை. ஜிஎஸ்டி சட்டப்படி வெளி மாநிலத்துக்கு விற்பனை செய்தால் சலுகை வரியை இழக்க நேரிடும்” என்று பேசினார்.
இந்தக் கூட்டத்திற்கு, வேலூர் அனைத்து வணிகர்கள் சங்க மாவட்டத் தலைவர் இரா.ப.ஞானவேலு முன்னிலை வகித்தார். மத்திய உற்பத்தி, சேவை வரித் துறை கோட்டக் கண்காணிப்பாளர் ச.அருளமுது, வணிகவரித் துறை உதவி ஆணையர் வி.பிரகாஷ், அனைத்து வணிகர்கள் சங்க மாவட்டப் பொருளாளர் ஏ.சி.என்.அருண்பிரசாத் ஆகியோர் பேசினர். இதில், திரளான வணிகர்கள் பங்கேற்றனர்.