திமுக மகளிர் அணியினர் குஷ்புவின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டின் ஆளும் திமுக அரசு கலைஞர் உரிமை தொகை என்ற பெயரில் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1000 வழங்கி வருகிறது. மகளிரிடமும், பிற மாநிலங்களிலும், பொருளாதார நிபுணர்களிடம் வரவேற்பு பெற்றுள்ள இத்திட்டத்தை, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக நிர்வாகியுமான நடிகை குஷ்பு, கடுமையான விமர்சித்துள்ளார்.
சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற குஷ்பு, தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 பிச்சை போட்டால் ஓட்டுப்போட்டு விடுவார்களா என கேள்வி எழுப்பினார். குஷ்புவின் இந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திமுகவினர் நடிகை குஷ்புவை சரமாரியாக தாக்கி பேசி வருகின்றனர். குஷ்புவும் அவர்களுக்கு சலைக்காமல் பதில் கூறி தனது கருத்தை நியாயப்படுத்த முயற்சித்து வருகிறார். மேலும், தன்னுடைய சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்க குஷ்பு மறுப்பு தெரிவித்துள்ளார். பல்வேறு பிரச்சனைகளை திசை திருப்ப திமுகவினர் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரகாண்ட் பொது சிவில் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
இந்த நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மகளிர் அணியினர் குஷ்புவின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, குஷ்புவின் படம் பொறிக்கப்பட்ட பேனரை செருப்பால் அடித்த அவர்கள், குஷ்புவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
முன்னதாக, குஷ்புவின் வாழ்க்கை முறை என்னவென்று நமக்குத் தெரியும். பண வசதி படைத்தவர், பெரிய நடிகை. நிச்சயமாக ஏழைப் பெண்களின் வாழ்க்கை முறை பற்றித் தெரிய வாய்ப்பில்லை என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தால் இந்த திட்டத்தால் பலனடையும் ஒரு கோடியே 16 இலட்சம் பெண்கள் குஷ்புவிற்கு பதிலளிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை குஷ்புவை டீல் செய்யும் பொறுப்பை திமுக இந்த முறை மகளிரணியிடம் ஒப்படைத்துள்ளது. அவர்களும் குஷ்புவுக்கு எதிராக தீவிரமாக களமாடி வருகின்றனர். குஷ்பு பேசிய வீடியோவை பொதுமக்களுக்கு போட்டுக் காட்டி, அவர்களின் கருத்துகளை பெற்று அதனை பதிவிட்டும் தங்களது எதிர்ப்பை திமுக மகளிரணியினர் பதிவு செய்து வருகின்றனர். பெண்கள் பலரும் குஷ்புக்கு எதிரான கருத்தை தெரிவித்து வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.