
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்தவர் திமுக வார்டு தேர்தல் பொறுப்பாளர் சக்திவேல் (50). இவரது முதல் மனைவி தமிழரசி அவரை விட்டு மூன்றாண்டுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டதால் இரண்டாவது மனைவி அமிர்தத்துடன் (45) வசித்து வந்துள்ளார். இவர்கள் தனது நிலத்தில் உள்ள கீற்று கொட்டகை வீட்டில் வசித்து வந்தனர்.
வழக்கம் போல இருவரும் அவரது நிலத்தில் உள்ள கீற்று கொட்டகை வீட்டில் இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டை வெளியே பூட்டிவிட்டு அவர் வீட்டுக்கு தீ வைத்துள்ளனர். சிறிது நேரத்தில் தீ மளமளவென அனைத்து இடங்களில் பரவியதால் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர். பின்னர் இருவரும் தீ விபத்தில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த செங்கம் போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையா? தற்கொலையா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.