ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது: திமுக எதிர்ப்பு!

By Manikanda Prabu  |  First Published Jan 17, 2024, 5:17 PM IST

ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என எதிர்ப்பு தெரிவித்து உயர்மட்ட குழுவுக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது


நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவை, நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து, விரைவில் பரிந்துரைகளை வழங்க எட்டு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி மத்திய அரசு அமைத்தது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், நிதி ஆயோக் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் சி காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Tap to resize

Latest Videos

சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் குழுவின் கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராகவும், சட்ட செயலாளர் நிதன் சந்திரா குழுவின் செயலாளராகவும் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, தங்களது பணியை தொடங்கிய உயர்மட்ட குழு, கடந்த 5ஆம் தேதி முக்கிய செய்தித்தாள்களில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது குறித்து பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகளை கேட்டு அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. உயர்மட்ட குழுவின் இணையதளம், மின்னஞ்சல், அல்லது தபால் மூலம், “நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு தற்போதுள்ள சட்ட நிர்வாக கட்டமைப்பில் பொருத்தமான மாற்றங்களைச் செய்வதற்கு ஆலோசனைகள் கோரப்படுகின்றன.” என அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

அதன்படி, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து உயர்மட்ட குழுவுக்கு சுமார் 5000 கருத்துக்கள் சென்றுள்ளன. அதேபோல், சமீபத்தில் அரசியல் கட்சிகளுக்கு கடிதம் எழுதிய ஒரே நாடு ஒரே தேர்தல் குழு, அவர்களின் கருத்துகளை கோரியதுடன், நேரில் வந்து விவாதிக்கவும் அழைப்பு விடுத்திருந்தது.

மத்திய கொள்கை ஆராய்ச்சி மையத்தின் வெளிநாட்டு நிதியுதவி உரிமம் ரத்து!

இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழுவிற்கு திமுக கடிதம் எழுதியுள்ளது. அக்கடிதத்தில், “அரசியல் சட்டத்திற்கும் - அச்சட்டம் தந்த கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிராக - ஒன்றிய மாநில உறவை மட்டுமின்றி, ஒன்றியத்திற்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை கைவிட வேண்டும்.” என திமுக வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குழுவிற்கு எழுதிய கடிதத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் மக்களின் விருப்பத்தை சமநிலையாக வரையறுக்கும் அரசியலமைப்பிற்கு எதிரானது என குறிப்பிட்டிருந்தார். ஒரே நாடு ஒரே தேர்தல், இயல்பிலேயே ஜனநாயக விரோதமானது என்று கூறிய சீதாராம் யெச்சூரி, இத்திட்டம் கூட்டாட்சியின் அடிப்படைக் கொள்கைகளை மறுக்கிறது என்று சுட்டிக்காடியதுடன், உயர்மட்ட குழுவின் நோக்கம் முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்றும் சாடியுள்ளார்.

click me!