
தி.மு.க. எம்.பி. கனிமொழி, இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, தமிழகம் மற்றும் தனது தொகுதியான தூத்துக்குடி மக்களின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியிடம் அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, தூத்துக்குடி துறைமுகத்தில் நிலவிவரும் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் கனிமொழி எடுத்துரைத்தார்.
தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம்
அதேவேளையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ. 452 கோடி செலவில் புதிய முனையம் அமைப்பதற்கு உறுதுணையாக இருந்ததற்காக பிரதமர் மோடிக்கு கனிமொழி நன்றி தெரிவித்தார். தூத்துக்குடி விமான நிலையத்தின் இந்த புதிய முனையம் கடந்த மாதம் 26-ஆம் தேதி பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பின் மூலம், மத்திய அரசுடன் மாநிலத்தின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து நேரடியாகப் பேசுவதற்கும், வளர்ச்சித் திட்டங்களில் ஒத்துழைப்பதற்கும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கனிமொழியின் வெளிநாட்டுப் பயணம்
கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குலை தொடர்ந்து, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை மேற்கொண்டது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாதத் தளங்கள் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவித்தது.
இதனை அடுத்து, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு விளக்குவதற்காக மத்திய அரசு பல்வேறு குழுக்களை உலக நாடுகளுக்கு அனுப்பியது. அந்த வகையில் திமுக நாடாளுமன்ற குழுவின் தலைவர் கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு ரஷ்யா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டனர்.
அப்போது, மத்திய பாஜக அரசு திமுகவைச் சேர்ந்த கனிமொழியை குழுவின் தலைவராகத் தேர்வு செய்து உலக நாடுகளுக்கு அனுப்பியது பேசுபொருளாக மாறியது.