
தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அவரது இலாக்காக்கள் வேறு அமைச்சர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டிருக்கின்றன.
செந்தில் பாலாஜியின் கைது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவரது கைதுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக தங்களை சீண்டிப்பார்க்க வேண்டாம் என பகிரங்கமாக முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோல், அவரது கைதுக்கு எதிர்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கோவை சிவானந்தா காலனியில் ஜூன் 16ஆம் தேதி மாலை கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கோவையில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் திராவிடக் கழகத்தின் தலைவர் வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்தி கம்யூனிஸ்டு செயலாளர் ஆர்.முத்தரசன், காங்கிரச் தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, “அனைத்து அதிகாரங்களையும் கையில் வைத்திருக்கும் ஒரு கட்சி, ஒரு நிறுவனம் அநீதியை இழைக்கும் போது நாடு பாதிக்கப்படுகிறது. அதனை எதிர்க்கும் தலைவராக முதல்வர் ஸ்டாலின் உள்ளார். இதனை நான் சொல்லவில்லை. இந்திய அரசியல் சட்டத்தை, மதசார்பின்மையை, ஜனநாயகத்தை காப்பாற்றும் தலைவராக ஸ்டாலின் உள்ளார். அனைத்து எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையாக ஸ்டாலின் இருக்கிறார். நம்பிக்கைக்குரிய ஒரே தலைவர் அவர் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் என்னிடம் கூறினார்.
கொங்கு மண்டலத்தில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அதற்கு செந்தில் பாலாஜி ஒரு காரணம் என்று எண்ணி இங்கு மிகச்சிறப்பாக செயல்பட்ட அமைச்சரை அமலாக்கத்துறையால் அவருக்கு நெருக்கடி வந்துள்ளது. சிறுசிறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி ப.சிதம்பரம் உள்ளிட்ட அனைத்து தலைவர்களையும் கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள். ஆனால், பிரதமரின் நண்பர் அதானி பல நாடுகளுக்கு பிரதமருடன் சுற்றுப்பயணம் செய்து, அந்தந்த நாட்டு பிரதமர்களோடு ஒப்பந்தம் ஏற்படுத்தி பிரதமர் கையெழுத்திடுகிறார் என அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க் நிறுவனம் சொல்கிறது. அந்த அதானி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அந்த நிறுவனம் சொல்கிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டால் பிரதமர் மோடி மவுனம் சாதிக்கிறார்.
BREAKING : இலாகா மாற்றத்திற்கு ஆளுநர் ஒப்புதல்.. ஆனால் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர எதிர்ப்பு..
அப்படிப்பட்ட ஊழல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிற நீங்கள், இங்கு சிறப்பாக செயல்பட்டு வரும் செந்தில் பாலாஜியை முடக்கி விட்டால் தாமரை மலரும் என நினைக்கிறீர்கள். அது பலிக்காது.” என்றார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசுகையில், “சர்வாதிகாரப் போக்கோடு நடந்து கொண்டிருக்கும் பாஜகவின் கைக்கூலியாக செயல்பட்டு வரும் அமலாக்கத்துறையை தமிழக மக்களின் சார்பாக வண்மையாக கண்டிக்கிறோம். வழக்குக்கு முறையாக ஒத்துழைப்பு தருகிறேன் என செந்தில் பாலாஜி தெரிவித்தபோதும், மனிதநேயம் இல்லாமல் அடக்குமுறைகளை ஏவியுள்ளீர்கள். தமிழகம் ஒன்றிய மத்திய அரசுகள் எங்கள் மீது அடக்குமுறைகளை ஏவியபோதெல்லாம் களம் கண்டு திமிரி எழுந்த மண் தான் இந்த தமிழக மண் என்பதை புரிந்து கொள்ளுங்கள். பொடா, தடா உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை எதிர்த்து களமாடியவர்கள் நாங்கள். இது மத்தியப்பிரதேசமோ, உத்தரப்பிரதேசமோ இல்லை. தமிழ்நாட்டுக்கென்று வரலாறு உள்ளது. எங்களை அடக்கி ஒடுக்க முடியாது. தலைவர் ஸ்டாலின் கண் அசைவுக்கு கட்டுப்பட்டு திமுகவினர் இருக்கின்றனர். இதுவே பழைய திமுக என்றால் அண்ணாமலை இப்படியெல்லாம் பேச முடியுமா? டிஆர் பாலு, ஆ.ராசா அனைவரும் மிதவாதியாக மாறிவிட்டார்கள்.” என்றார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசும்போது, “எமர்ஜென்சியில் கூட இதுபோன்று பிரச்சினைகளை சந்தித்ததில்லை. அறிவிக்கப்படாத எமர்ஜென்சியாக இப்போது நடந்து கொண்டிருக்கிறது. எந்த மாநிலத்தில் எல்லாம் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ளதோ. அதனை கவிழ்ப்பதற்கான முயற்சிகளை பாஜக மேற்கொள்கிறது. தவறு செய்தால் விசாரியுங்கள்; யாரும் வேண்டாம் என சொல்லவில்லை. முதல்வரும் அதையேத்தான் சொல்கிறார். சீறுடை அணிந்து அமலாக்கத்துறையினர் தவறு செய்கிறார்கள். மனித உரிமை மீறல் இருக்கிறது. எட்டாண்டுகளுக்கு முன்னால் நடந்த பிரச்சினைக்கு இன்றைக்கு தலைமைச் செயலகத்தில் ஆதாரம் கிடைக்குமா? யாரை மிரட்டுவதற்காக இதுபோன்று செய்கிறீர்கள். நாங்கள் பயந்து விடுவோமா? செந்தில் பாலாஜியை மிரட்டியுள்ளார்கள். நான் வழக்கை சந்தித்துக் கொள்கிறேன், மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் என சொல்லியிருக்கிறார். எனவேதான் அவர்களுக்கு கோபம். செந்தில் பாலாஜி பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, கோவை உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.