3வது அலையில் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டாலும், தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் உயிரிழப்புகள் இல்லை. முதலமைச்சரின் நடவடிக்கையால் உயிரிழப்புகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, 'கொரோனா 3வது அலையில் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டாலும், தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் உயிரிழப்புகள் இல்லை. முதலமைச்சரின் நடவடிக்கையால் உயிரிழப்புகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. 90 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி பெற்றவர்களாக சென்னை மாவட்டம் திகழ்ந்து வருகிறது. இதுவரை 17 சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு உள்ளது. 27 ஆயிரம் இடங்களில் சென்னையில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது.
undefined
கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் வார இறுதிக்குள் செலுத்தப்பட்டுவிடும். தடுப்பூசி செலுத்துவதில் மாநகராட்சிகளிலேயே, சென்னை மாநகராட்சி முன்னணியில் இருக்கிறது. கொரோனா சிகிச்சைக்கு தயார்படுத்துவதில் தமிழ்நாடு நாட்டிலேயே முன்னணியில் இருக்கிறது.
கொரோனா நோய்த் தடுப்பு பணியில் தமிழ்நாட்டை பின்பற்றவேண்டும் என்ற நிலையை முதலமைச்சர் ஏற்படுத்தியிருக்கிறார். சென்னையில் உள்ள 2 லட்சத்து 15 ஆயிரம் பேர் 15 முதல் 18 வயது நிரம்பியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்.
கொரோனா நோய் தொற்றுக்கு ஒரே தீர்வு தடுப்பூசிதான் என்று கூறி நடவடிக்கை எடுத்து வருபவர் முதலமைச்சர். 3வது அலையில் உயிரிழப்பு இல்லாத தமிழ்நாடாக திகழ முதலமைச்சர் எடுத்துவரும் முயற்சிக்கு நிச்சயம் பலன் கிட்டும். கொரோனா பரவல் பலமடங்கு பெருகியிருப்பதாலேயே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோயில்கள் திறக்கப்படாது. வெள்ளிக்கிழமைக்கு பதிலாக வியாழக்கிழமையே இறைவனை தரிசித்துக் கொள்ளலாம்’ என்று கூறினார்.