முந்துகிறது தி.மு.க... ஏசியா நெட் நியூஸ் சர்வேயில் அதிரடி முடிவுகள்!

First Published Jul 26, 2018, 8:56 PM IST
Highlights
DMK leads in Parliament Election Opinion Poll


அரை நூற்றாண்டுக்கும் மேலாக தி.மு.க மற்றும் அ.தி.மு.க  இரு கட்சிகள் மட்டுமே  தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. திமுக மற்றும் அதிமுகவிற்கு நிகரான மாற்று இதுவரை இல்லாத சூழலில் சூப்பர்ஸ்டார் மற்றும்  உலகநாயகன் என தமிழ்சினிமாவின் தூண்கள்  அரசியல் களம் காண்கின்றனர். 

தி.மு.க மற்றும் அ.தி.மு.க விற்கு மட்டுமே மாறி மாறி வாக்களித்து வந்த வாக்களர்களுக்கான  ஜெயலலிதாவின் மறைவும், கருணாநிதியின் செயலிழப்பும் மக்களின் மனநிலையை மாற்றியுள்ளது.  இதன் எதிரொலியாக எதிர்வரும் மக்களவை தேர்தல் மற்றும் அடுத்த சட்டமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு  பலமுனைப் போட்டி நிலவ உள்ளது.

இதுவரை மற்ற கட்சிகளுக்கு வாக்களித்துவந்த ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் ரசிகர்களின் வாக்குகள், இனிவரும் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆனால்  அது, ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையில் இருக்கும் வாக்குகளை மட்டுமே  சிதறடிக்கும், எதிர்கட்சியான திமுகவிற்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை அது ஆய்வில் தெளிவாக உணர்த்தியுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசியல் களத்தில் எந்த கட்சியையும் சாராத மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது? இதை அறிய, AZ ரிசர்ச் பார்ட்னர்ஸ் என்ற அமைப்பு, தமிழகம் முழுவதும் 11,691 பேரிடம் கருத்து கேட்டு அதன் முடிவை வெளியிட்டுள்ளது. 

ரஜினி ஆதரவு:

ஆய்வில் வெளியான முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால், கமலைவிட ரஜினி தமிழக அரசியலில் கடும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என தெரிகிறது. ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்திற்கு மக்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. தமிழகம்  முழுவதும் 11 சதவிகிதம் பேர் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் கமலுக்கு 4 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு.

ரஜினிக்கு சென்னையில் அமோக வரவேற்பு உள்ளது. 19 சதவிகிதம் வாக்காளர்கள் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய மற்றும் மேற்கு  மண்டலத்தில்  12 சதவிகிதம் பேர் ரஜினிக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். 

தென் தமிழகத்தில் 9 சதவிகிதம் மற்றும் வட தமிழகத்தில் 7 சதவிகிதம் ஆதரவு என ஒட்டுமொத்தமாக 11 சதவிகிதம் ஆதரவை ரஜினி பெற்றுள்ளார். ரஜினியின் அரசியல்  வருகையால் பாதிப்பு இல்லை என்று கூறிய அரசியல் தலைகள், ரஜினிக்கு கிடைக்கப்போகும் ஆதரவு அதிர்ச்சியளிக்கும் என்பதை ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

திமுகவிற்கு ஆதரவு:

ரஜினிக்கு மக்கள் மத்தியில் கணிசமான ஆதரவு உள்ள அதே நிலையில், வலுவான அடிப்படை கட்டமைப்பை கொண்ட கட்சியான திமுக, அதிமுகவை காட்டிலும் சற்று கூடுதல் பலத்துடன் உள்ளது. 

தி.மு.கவிற்கு 29 சதவிகிதம் வாக்காளர்களும் அ.தி.மு.கவிற்கு 27 சதவிகிதம் வாக்காளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் (மேற்கு) அக்கட்சியின் செல்வாக்கு அதலபாதாளத்தில் விழுந்துள்ளது. ஆனால் கொங்கு மண்டலத்தில் திமுகவின் வாக்கு வங்கியில் எந்த மாற்றமும்   ஏற்படவில்லை என்பதை ஆய்வு முடிவுகள்  சொல்கிறது.

கடந்த  2014 மக்களவை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் 45 சதவிகிதம் வாக்கு வங்கியை பெற்ற அ.தி.மு.கவிற்கு 30 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் தி.மு.கவிற்கு 24 சதவிகிதம் வாக்காளர்களின் ஆதரவு உள்ளது.  

தென் தமிழகத்தில் அ.தி.மு.கவிற்கு 29 சதவிகிதம் மற்றும் தி.மு.கவிற்கு 25 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வட மற்றும் மத்திய  மண்டலங்களில் தி.மு.கவிற்கு அமோக ஆதரவு உள்ளது. தமிழகத்தின் மத்தியில்  36 சதவிகிதம் மற்றும் வட  தமிழகத்தில் 34 சதவிகிதம் மக்களின் ஆதரவை தி.மு.க பெற்றுள்ளது. இந்த பகுதிகளில் தி.மு.கவிடம் அ.தி.மு.க பலத்த அடி வாங்கும் என ஆய்வு முடிவுகள் சொல்கிறது. 

தி.மு.கவின் கோட்டையாக விளங்கும் சென்னையில் தி.மு.கவிற்கு 23 சதவிகிதம் ஆதரவும் அ.தி.மு.கவிற்கு 28 சதவிகிதம் ஆதரவும் உள்ளது. சென்னையில் ரஜினிக்கு கிடைத்திருக்கும் பேராதரவு, தி.மு.க மற்றும் அ.தி.மு.கவின் வாக்கு வங்கிகளை பாதிக்கக்கூடும் என்பதை ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் அறிந்துகொள்ள முடிகிறது. 

ஒட்டுமொத்தமாக தி.மு.கவிற்கு 29 சதவிகிதம் மற்றும் அ.தி.மு.கவிற்கு 27 சதவிகிதம் ஆதரவு கிடைத்துள்ளது. ரஜினிக்கு 11 சதவிகிதம் பேரின் ஆதரவு உள்ளது. எனவே, வரும் மக்களவை தேர்தலில் அ.தி.மு.கவைவிட தி.மு.கவின் கை சற்று ஓங்கியே இருக்கும் என்பதையும், ஒருவேளை ரஜினி அரசியல் கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்தால், பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதையும்  இந்த ஆய்வு தெளிவாக சொல்கிறது.

click me!