
தவெக தலைவர் விஜய் சனிக்கிழமைதோறும் தேர்தல் பிரசாரம் செல்லும் இடங்களில் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு திமுகவினரும் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இதற்கிடையே சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடந்த திமுக கூட்டத்தில் இயக்குனர் கரு.பழனியப்பனும், அமைச்சர் பெரிய கருப்பனும் விஜய்க்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து கமலை அசிங்கப்படுத்தியதால் மகக்ள் நீதி மய்யம் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் பேசிய கரு.பழனியப்பன், ''விஜய் இந்தியை எதிர்த்து அரசியல் செய்கிறார். நாங்களும் அதைத் தான் செய்கிறோம். இதனால் அவர் எங்களுடன் வந்து விட வேண்டியது தானே. புது ஐட்டம் விற்றால் தானே தனிக்கடை போட வேண்டும். ஆனால் நான் விஜய்யை எந்த மேடையிலும் விமர்சிக்க மாட்டேன். ஏன் என்றால் திமுக தான் அடுத்த முறை விஜய்க்கு எம்.பி. சீட் கொடுக்க வேண்டும். அவர் திமுகவுக்கு வந்து விடுவார்'' என்றார்.
இதன்பிறகு கரு.பழனியப்பன் கருத்தை ஆதரித்து பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், '' கமலஹாசனை போல இன்றைய நடிகர்கள் யாரும் இருக்க முடியாது. அவருக்கும் ஆசை இருந்தது. கட்சி தொடங்கினார் ஆனாலும் முடியவில்லை. இதை வைத்து தான் கரு.பழனியப்பன் சூசகமாக சொல்கிறார்'' என்று தெரிவித்தார். இவர்கள் இருவரும் கமலை அசிங்கப்படுத்துவதுபோல் பேசியதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.
திமுவை எதிர்த்து பின்பு ஐக்கியமாகிய மநீம
கமலை பொறுத்தவரை மநீம என்ற கட்சியை ஆரம்பித்து திமுகவை தொடக்கத்தில் கடுமையாக எதிர்த்தார். கலைஞர் டிவியை அவரது கட்சியின் சின்னமான டார்ச் லைட்டை கொண்டு உடைத்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர் கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்பதை உணர்ந்தார். அதன்பிறகு தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு கொடுத்து விட்டு, அதற்கு பலனாக திமுகவிடம் இருந்து எம்.பி. சீட் பெற்றார்.
கரு.பழனியப்பனுக்கு சினேகன் கண்டனம்
இதை வைத்து தான் எம்.பி சீட்டுக்காக கமல் திமுகவுக்கு ஆதரவு கொடுத்தார் என பெரிய கருப்பனும், கரு.பழனியப்பனும் பேசியுள்ளனர். இந்நிலையில், இந்த பேச்சுக்கு மநீமவின் நிர்வாகி சினேகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ''கரு.பழனியப்பன் பேசியது சரியல்ல. அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதும், பின்பு கூட்டணி சேருவதும் இயல்பு தான். இதே கரு.பழனியப்பன் ஆரம்ப காலங்களில் திராட இயக்கத்தை எவ்வளவு விமர்சித்தார்? என மிகப்பெரிய பட்டியலே கொடுக்க முடியும்.
கமல்ஹாசன் பலம் என்ன தெரியுமா?
தெருவில் நடப்பவர்களுக்கு இவர்கள் ராஜ்யசபா சீட் கொடுக்கவில்லை. இரண்டு தேர்தலில் எங்களின் பலம் என்ன என்பது தெரிந்து தான் சீட் கொடுத்தார்கள். மேலும் எங்கள் தலைவரின் (கமல்) முகம் அவர்களுக்கு தேவைப்பட்டதால் தான் சீட் கொடுத்து இருக்கிறார்கள். அதுவும் எங்களுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட சீட்டை தான் கொடுத்திருக்கிறார்கள்.
ஒரு பைசா கூட வாங்கவில்லை
தேர்தலில் திமுகவிடம் ஒரு பைசா கூட வாங்காமல் திமுக கூட்டணிக்கு பிரசாரம் செய்தோம். இந்த உழைப்புக்கான சன்மானம் தான் எம்.பி சீட். கரு.பழனியப்பன் யாருக்காக வேலை பார்க்கிறார்? திமுகவில் இருந்து கொண்டே கூட்டணியை உடைக்க பார்க்கிறாரா? இந்த சந்தேகத்தை தீர்க்க வேண்டியது திமுகவின் கடமை'' என்றார். திமுகவினரின் பேச்சுக்கு கமல்ஹாசனின் பதில் என்ன? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.