
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, தீபம் ஏற்றி வழிபடலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்திருந்தது. இதற்கு காவல்துறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தீபம் ஏற்றுவதற்கு எதிராக கோயிலின் நிர்வாகி சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்துள்ளது பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றம் அனுமதி அளித்தபிறகு வேண்டுமென்றே தமிழக அரசின் அறநிலையத்துறை மேல்முறையீடு செய்வது ஏன்? திமுக அரசு தொடர்ந்து இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருவது ஏன்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு எதிராக மேல்முறையீடு செய்ததற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்ட தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து திமுக அரசின் இந்து சமய அறநிலையத்துறை மேல்முறையீடு செய்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இந்து மத வெறுப்பு
ஆதியிலிருந்து முருகப்பெருமான் வீற்று அருள்பாலிக்கும் கந்தர் மலையை சிக்கந்தர் மலையாகச் சிலர் மாற்ற முயற்சித்தபோது வேடிக்கை பார்த்துவிட்டு, அறுபடைவீட்டைக் காக்க அலைகடலென மக்கள் திரண்டு ஆர்ப்பரித்தபோது ஏவல்துறையைக் கொண்டு அராஜகம் செய்த திமுக அரசு, தற்போது ஒருபடி மேலே சென்று கார்த்திகேயனின் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றக்கூடாது என முறையிட்டுத் தனது இந்து மத வெறுப்பை மீண்டுமொருமுறை வெளிப்படுத்தியுள்ளது.
இந்து மதத்தை மட்டும் குறிவைப்பது ஏன்?
ஒன்று மட்டும் நிச்சயம், மதச்சார்பின்மை வேடம் போட்டு இந்து மதத்தை மட்டும் குறிவைத்துத் தாக்கும் திமுக அரசின் இந்த மேல்முறையீட்டு முயற்சியும் அப்பன் முருகனின் ஆசியுடன் முறியடிக்கப்படும்! குன்றம் குமரனுக்கே என்பது ஆணித்தரமாக மீண்டும் உணர்த்தப்படும். மக்களின் மதநம்பிக்கையைப் புண்படுத்தும் திமுக அரசும் தூக்கியெறியப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை ஆவேசம்
இதேபோல் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மாண்புமிகு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன அவசியம் வந்தது? ஆலயங்களைப் பராமரிக்க வேண்டிய துறையை, ஆலயங்களின் சொத்துக்களையும், நிதியையும் முறைகேடாகப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆலய நடைமுறைகளுக்கு எதிராகப் பயன்படுத்த, திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா?
திமுகவின் அயோக்கியத்தனம்
இந்து சமய அறநிலையத்துறையை, முறைகேடாகவும், இந்து சமய மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு. தேவையின்றி, பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த, ஆலய நிதியையே பயன்படுத்தும் அயோக்கியத்தனத்தை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என்று கூறியுள்ளார்.