
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், திமுக துணை பொதுச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பேசியது அரசியல் வட்டாரங்களில் மட்டுமல்ல, பொதுமக்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர், “காமராஜர் ஏசி இல்லாமல் இருக்க முடியாதவர். கலைஞர் அவருக்காக ஏசி வசதியுடன் விடுதிகளை ஏற்படுத்தினார்” எனவும், "மரணிக்கும் முன் காமராஜர் கருணாநிதியின் கையைப் பிடித்து ஜனநாயகத்தையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்" என்றும் தெரிவித்தார்.
காமராஜரை கன்னியக்குறைவாக பேசியுள்ள திருச்சி சிவாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியினரும், நாடார் சமூகத்தினரும் திருச்சி சிவா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, காங்கிரசார் திருச்சி சிவாவின் இல்லத்தை நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டபோது, போலீஸார் சிலரைக் கைது செய்தனர்.
திருச்சி சிவா வெளியிட்ட செய்திக்குறிப்பில் திருச்சி சிவா, “என் உரையின் ஒரு பகுதி பெருந்தலைவர் காமராஜரின் புகழுக்கு களங்கம் விளைவித்ததாக கூறப்படுகிறது. எனது நோக்கம் அது அல்ல. நான் எப்போதும் எதிர்க்கட்சி தலைவர்களைத்தான் கூட கண்ணியத்தோடு விமர்சிப்பவனாக இருக்கிறேன்” எனக் கூறினார். அதே நேரத்தில், அவர் நேரடியாக மன்னிப்பு கேட்கவில்லை, ஆனால் அதை விவாதப் பொருளாக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
பல்வேறு மேடைகளில் காமராஜரின் சாதனைகளை புகழ்ந்து பேசியதாக திருச்சி சிவா விளக்கம் அளித்தாலும், இந்த உரையில் அவர் குறிப்பிட்ட தகவல்கள் வரலாற்று ஆதாரமற்றவை எனக் கூறப்படுகிறது. இதனால், அவரது விளக்கம் பலருக்கு ஏற்கத்தக்கதாகத் தோன்றவில்லை. குறிப்பாக காமராஜர் ஏசி இல்லாமல் இருக்க முடியாது என்பது அவரது எளிமையான வாழ்க்கைபாங்குக்கு முரணானதாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் வைத்துள்ளனர்.
இந்த விவகாரம், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வரலாற்று புரிதலுடனும், மரியாதையுடனும் பேச்சுவழக்கில் ஈடுபட வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. பெருந்தலைவர் காமராஜர் போன்ற தலைவர்களை பற்றி பேசும் போது, உண்மை தகவல்களையும், அரசியல் மரியாதையையும் பின்பற்றவேண்டும் என்பதே அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது. இந்த நிலையில் இன்று சேலம் மாவட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் திருச்சி சிவாவின் உருவ பொம்மையை எரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.