
ஓசூரில், மர்ம நபர்களால் கட்டை மற்றும் இரும்பு கம்பியால் தி.மு.க. நிர்வாகி சரமாரியாக தாக்கப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர் சின்ன எலசகிரி காமராஜ் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (41). தி.மு.க. நிர்வாகி. இவர் அந்த பகுதியில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும், உள்ளாட்சித் தேர்தலில் 5–வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்காக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமை அவர் தனது நிறுவனத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த சிலர், கட்டை மற்றும் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார்கள். இதில் ஆறுமுகம் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் ஆறுமுகம் படுகாயம் அடைந்த தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தளி சட்டமன்ற உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் மருத்துவமனைக்குச் சென்று ஆறுமுகத்தை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இது குறித்து மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் கூறுகையில், “உள்ளாட்சி தேர்தலில் தோல்வி பயத்தில் சிலர் இதை போல நடந்து கொள்கிறார்கள். ஆறுமுகத்தை தாக்கிய நபர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், தலைமை கழகத்தில் அனுமதி பெற்று போராட்டம் நடத்தப்படும் என்றார்.
அப்போது ஓசூர் நகர தி.மு.க. செயலாளர் மாதேஸ்வரன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன் நகர பொருளாளர் சென்னீரப்பா, மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.