ஜூன் 1ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கூட்டம்: திமுக அறிவிப்பு!

By Manikanda PrabuFirst Published May 28, 2024, 12:17 PM IST
Highlights

திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கு மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில், 6 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்து விட்ட நிலையில், 8 மாநிலங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கு வருகிற ஜூன் மாதம் 1ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

வாக்கு எண்ணிக்கையை சுமூகமாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதேபோல், அரசியல் கட்சிகளும் வாக்கு எண்ணிக்கைக்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில், திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் வருகிற ஜூன் மாதம் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, ஜூன் 4 அன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து கலந்தாலோசித்திட, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் “ மாவட்டக் கழகச் செயலாளர்கள் - கழக வேட்பாளர்கள் - தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்” வருகிற 01-06-2024 சனிக்கிழமை காலை 11.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

இக்கூட்டத்தில் தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., வாக்கு எண்ணிக்கையின்போது தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்து ஆலோசனை வழங்குவார்.

அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

முன்னதாக, “தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38,500க்கும் மேற்பட்டோர் ஈடுபடவுள்ளனர். அனைத்து மையங்களிலும் வாக்கு எண்ணிக்கைக்கு 3,300 மேஜைகள் அமைக்கப்பட உள்ளன. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணிக்கு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணும் பணி கேமராவில் பதிவு செய்யப்படும்.” என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார்.

தமிழகத்தை பொறுத்தவரை மாநிலம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் ஆகியவை சீல் வைக்கப்பட்டு அந்தந்த தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு, 3 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு, சிசிடிவி கண்காணிப்புடன், வேட்பாளர்களின் முகவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!