பாஜக நிர்வாகியிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு நிலைக்குழு அமைக்கப்பட்டு 3 ஷிப்டுகளாக இரவு, பகலாக தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ரயிலில் பணம் கடத்தி செல்வதாக சென்னை அடுத்த தாம்பரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாம்பரம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களையும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் குளிர்சாதன பெட்டியில் சந்தேகத்திற்கிடமாக 3 பேர் பயணம் செய்தனர். அவர்களை விசாரித்து சோதனை செய்ததில் அவர்களிடம் 3 கோடியே தொன்னூற்று ஒன்பது லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.
போலீஸ் விசாரணையின்போது, பணத்தை கொண்டு சென்ற, சதீஷ் (34), சதீஷின் தம்பி நவின் (31) மற்றும் பெருமாள் (24) ஆகியோர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களிடம் இருந்த சுமார் ரூ.3.99 கோடி ரொக்கம், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், சதீஷ் என்பவர் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் மேலாளராக பணியாற்றி வருவது தெரிய வந்துள்ளது. பாஜக உறுப்பினரான இவர், நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக பணத்தை கொண்டு செல்வதாக போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளதாக தெரிகிறது. மேலும், பெருமாள் என்பவர் நயினார் நாகேந்திரனின் உறவினர் உறவினர் எனவும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமான பாஜக பிரமுகரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை சாலிகிராமத்தில் முருகன் வீடு, நயினார் நாகேந்திரன் ஆதரவாளர் கணேஷ் மணி ஆகியோரின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், கணேஷ் மணி வீட்டில் இருந்து மேலும் ரூ.2 லட்சம் ரொக்கம், 100 வேஷ்டிகள், 44 நைட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உயிரைக்கூட துச்சமாக நினைத்து பிறருக்கு உதவும் மீனவர்கள்: கனிமொழி உருக்கம்!
இந்த நிலையில், சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பாஜக நிர்வாகியிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம், திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார்.
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஊழியர்களிடம் இருந்து ரூ.4.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புகாரில் தெரிவித்துள்ள ஆர்.எஸ்.பாரதி, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும் எனவும், தமிழகத்தில் அனைத்து பாஜக வேட்பாளர்களின் இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பல கோடி ரூபாய் பணம் ரகசிய இடங்களில் பதுக்கி வைத்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.