
திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழாவும், சட்டமன்ற வைரவிழா நிகழ்ச்சியும் வருகிற ஜூன் 3ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. கருணாநிதியின் 94வது பிறந்தநாளில் கூடுதல் சிறப்பாக, சட்டமன்றப் பணிகளுக்கான வைரவிழா ஆண்டும் இணைந்து கொண்டாட தொண்டர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.
கடந்த 70 ஆண்டுகளில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் மத்தியிலும் மாநிலத்திலும் இயங்கி வருகின்றன. இதில் 60 ஆண்டுக்கால தொடர்ச்சியான சட்டமன்ற அனுபவமோ, நாடாளுமன்ற அனுபவமோ கொண்டவர்களைத் தேடிப் பார்த்தால், கருணாநிதியைத் தவிர வேறு எவரையும் அடையாளம் காட்டிட முடியாது.
1957 ல் குளித்தலைத் தொகுதியில் தொடங்கியது அவரது வெற்றிப் பயணம். 1962 ல் தஞ்சை, 1969, 1971 தேர்தல்களில் சைதாப்பேட்டை, 1977, 1980 தேர்தல்களில் அண்ணாநகர், 1989, 1991 தேர்தல்களில் துறைமுகம், 1996, 2001, 2006 எனத் தொடர்ச்சியாக சேப்பாக்கம், 2011, 2016 என இருமுறை திருவாரூர் என அவரது வெற்றிப் பயணம் ஓயவேயில்லை. கடந்த 2016 தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையையும் நிகழ்த்திக் காட்டியவர்.
ஒரே கட்சி, ஒரே சின்னம், 13 முறை தேர்தல் களத்தில் போட்டி, அத்தனையிலும் வெற்றி, 5 முறை முதல்வராகப் பொறுப்பேற்று 18 ஆண்டுகள் அந்தப் பொறுப்பினில் சிறப்பாகச் செயல்பட்டு, தமிழகத்தில் அதிககாலம் முதல்வராகப் பணியாற்றிய கருணாநிதிக்கு வருகிற ஜூன் 3ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் விழாவில் தேசியத் தலைவர்களும், மாநிலத் தலைவர்களும், முன்னாள், இன்னாள் முதல்வர்களும் கலந்து கொள்கிறார்கள்.
வைரவிழா நிகழ்ச்சி முடிந்ததும், மாநிலம் முழுக்க, ஒன்றியம், நகரம், பேரூராட்சிகளில் பிறந்தநாள் விழாவும், வைரவிழா நிகழ்ச்சியாக, பட்டிமன்றம், பொதுக்கூட்டம், நலத்திட்டங்கள் வழங்குவது, கொடியேற்றுவது என, 15 நாள் முதல் ஒரு மாதம் வரையில் திமுக-வினர் கொண்டாடவிருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சி திமுக-வின் தேர்தல் பிரசாரமாகவும் இருக்கும் என்கிறார்கள் திமுக முக்கிய நிர்வாகிகள்.
80 ஆண்டுகாலமாக தமிழ்ச் சமுதாயம் மேன்மையுற, ஓயாது உழைத்த தலைவர் அவர்கள், மருத்துவ காரணங்களுக்காக சிறிது ஓய்வெடுக்கும் நிலையில், அவரது இலட்சியங்களை நிறைவேற்ற நாம் தொடர்ந்து உழைப்பதே அவருக்கு நாம் வழங்கும் பிறந்தநாள் பரிசாக அமையமுடியும். மருத்துவர்கள் அனுமதித்தால், பிறந்தநாள் விழாவில் உங்களுடன் சேர்ந்து நானும் தலைவரின் முகம் பார்த்து, கரம் பற்றி, அவரின் வாழ்த்துகளைப் பெறுவதற்கு ஆவலாக இருக்கிறேன் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.