50 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களின் முதுகிலே குத்திய திமுக, காங்கிரஸ்: பாஜக கண்டனம்!

By Manikanda Prabu  |  First Published Apr 3, 2024, 3:04 PM IST

ஐம்பது வருடங்களுக்கு முன் தமிழர்களின் முதுகிலே குத்திய திமுகவும், காங்கிரஸும் இப்போது மக்களிடையே பொய் சொல்லி ஆதரவு கேட்பதாக தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது


கச்சத்தீவு எப்படி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது என வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் ஆர்.டி.ஐ. மூலம் பெற்ற தகவல்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டதையடுத்து, தமிழகத்தில் கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாகியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்குன் இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை விமர்சிக்கும் பாஜக, அக்கட்சிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறது.

இந்த நிலையில், ஐம்பது வருடங்களுக்கு முன் தமிழர்களின் முதுகிலே குத்திய திமுகவும், காங்கிரஸும் இப்போது மக்களிடையே பொய் சொல்லி ஆதரவு கேட்பதாக தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

Latest Videos

undefined

இதுகுறித்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கச்சத்தீவை ஏன் தாரை வார்த்தீர்கள் என்று திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரை கேட்டால், கன்னியாகுமரி கடல் பகுதியில் உள்ள (வாட்ஜ் வங்கி) பெரும் பரப்பை கச்சத்தீவுக்கு பதிலாக பெற்று கொண்டதாக சொல்லி மோசடி, பித்தலாட்டம் செய்கிறார்கள். வாட்ஜ் வங்கி என்பது இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமாகவே இருந்து வந்தது. 1976 ஒப்பந்தத்தில் இயற்கை வளம் மிக்க அந்த பகுதியில் மூன்று வருடங்களுக்கு மட்டுமே இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் மீன் பிடிக்க அனுமதி என்றும் அதன் பிறகு அங்கு மீன் பிடிக்கும் அனுமதி இந்தியர்களை தவிர யாருக்கும் இல்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

அந்த ஒப்பந்தத்தில் இலங்கையிடமிருந்து 'வாட்ஜ் வங்கி' பகுதியை இந்தியா பெற்றதாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், கச்சதீவை தாரை வார்த்த காங்கிரஸ் கட்சியினர் கன்னியாகுமாரியோடு இந்த விவகாரத்தை இணைத்து  பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் காங்கிரஸ் இது போன்ற தவறான தகவல்களை, கருத்துக்களை பரப்புவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

ராகுல் காந்திக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்!

அதே போல், ப. சிதம்பரம் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் கச்சத்தீவிற்கு பதிலாக 6 லட்சம் இந்திய பூர்வீக மக்களுக்கு (மலையக தமிழர்கள்) குடியுரிமை வழங்கப்பட்டது என்ற மற்றொரு உண்மைக்கு புறம்பான தகவலை கூறியிருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது. மலையக தமிழர்களின் குடியுரிமை குறித்த ஒப்பந்தமானது இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இலங்கை பிரதமர் சிறிமாவோ அவர்களுக்கு இடையே 1964 ம் ஆண்டு,அக்டோபர் மாதம் 30ம் தேதி ஏற்பட்டது. அதற்கும் இந்திரா காந்தி அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கச்சத்தீவு ஒப்பந்தமானது 10 வருடங்களுக்கு பின்னர் 1974 ம் ஆண்டு தான் மேற்கொள்ளப்பட்டது.

தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைக்க, மோசடி வேளைகளில் காங்கிரஸ் மற்றும் தி மு க வினர் ஈடுபட்டுவருவது தெளிவாகிறது. செய்த தவறை மறைக்க இல்லாத கட்டுக்கதைகளையெல்லாம் இட்டுக்கட்டி பேசி வருகின்றனர் துரோகிகள். 'தொட்டிலையும் ஆட்டி விட்டு, பிள்ளையையும் கிள்ளி விடுகிற கதையாக' கச்சத்தீவை தாரைவார்த்து விட்டு, பின்னர் அதே கச்சத்தீவை மீட்போம் என்று போலி நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது தி மு க என்பதை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.கடந்த ஐம்பது வருடங்களுக்கு முன் தமிழர்களின் முதுகிலே குத்திய திமுக வும், காங்கிரஸும் இப்போது மக்களிடையே பொய் சொல்லி ஆதரவு கேட்பது வெட்கக்கேடு.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

click me!