ஊழல் நிறைந்த திமுக, அதிமுக கட்சிகளால் தூய்மையான ஆட்சியை தர இயலாது..

 
Published : Nov 15, 2016, 08:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
ஊழல் நிறைந்த திமுக, அதிமுக கட்சிகளால் தூய்மையான ஆட்சியை தர இயலாது..

சுருக்கம்

தமிழகத்தில் ஊழல் நிறைந்த திமுக, அதிமுக கட்சிகளால் தூய்மையான ஆட்சியை தர இயலாது என்று தேசிய செயலாளர் முரளிதரராவ் கூறினார்.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் பிரபுவை ஆதரித்து அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் முரளிதரராவ், தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் திங்கள்கிழமை தேர்தல் பிரசாரம் செய்தனர்.

முன்னதாக தேசிய பொது செயலாளர் முரளிதரராவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “மத்திய பாரதீய ஜனதா கட்சியின் நலத்திட்டங்களை தமிழக மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்தியில் மட்டும் அல்லாமல், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களிலும் நல்ல ஆட்சி அமைய வேண்டும்.

தி.மு.க, அ.தி.மு.க ஆகிய 2 கட்சிகளும் ஊழல் நிறைந்த கட்சிகள். இவர்களால் தூய்மையான ஆட்சியை தர இயலாது. அது பா.ஜ.க.வால் தான் தர முடியும். பிரதமர் மோடி போன்றவர்களால் தான் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட முடியும்.

1946–ம் ஆண்டு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்ட போது அதிக மதிப்பு கொண்ட நோட்டுகளின் எண்ணிக்கை மிகக்குறைவாகத்தான் இருந்தது. 1978–ம் ஆண்டு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்ட போதும் அதிக மதிப்பு கொண்ட நோட்டுகளின் எண்ணிக்கை 15 சதவீதம் தான் இருந்தது. ஆனால் தற்போது 500, 1,000 ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை 86.6 சதவீதம் உள்ளது. இது கருப்பு பணத்தையும், கள்ளப்பணத்தையும் ஒழிக்கும்.

கடந்த 10 ஆண்டுகளில் நேபாளம், வங்காளதேசம், பாகிஸ்தான் வழியாக கள்ள நோட்டுகள் ஏராளமாக வந்து விட்டன. இவற்றை தடுக்க இது தான் வழி, வேறு வழி இல்லை. கருப்பு பணம், கள்ள பணத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால் வீட்டு மனை உள்பட அனைத்து பொருட்களின் விலை குறையும். அரசுக்கு வருமானம் அதிகரிக்கும். இதனால் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கும்.

தி.மு.க. அ.தி.மு.க. கட்சிகள் மாறி, மாறி தமிழ்நாட்டில் ஆட்சி செய்கின்றனர். ஆனால் காவிரி நீர் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. அந்த 2 கட்சியாலும் காவிரி நீர் பிரச்சனையை தீர்க்க முடியாது. எனவே தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் காவிரி பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்போம். தி.மு.க., காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகள் குடும்பத்தில் உள்ளவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து இருவரும் அரவக்குறிச்சி தொகுதியில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்தனர்.

இந்த பேட்டியின் போது கோட்ட பொறுப்பாளர் சிவசாமி, கரூர் மாவட்ட தலைவர் முருகானந்தம் உள்பட பலர் உடனிருந்தனர்.

 

PREV
click me!

Recommended Stories

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதுகில் குத்திய திமுகவினர்..! முக்கிய விக்கட்டை தூக்கிய எடப்பாடி..! ஸ்டாலின் அதிர்ச்சி
புதிய பொறுப்பாளர்கள் நியமித்து அதிரடி.. தமிழ்நாடு அரசியலில் பாஜக அதிரடி மூவ்!