தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 14ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பிய அவர், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.
இதனிடையே, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 18ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்ததற்கிடையே, அவரது உடல்நிலை சீராக இல்லை என்ற தகவலை மருத்துவமனை வெளியிட்டது. இதனால், அவரது ரசிகர்களும், தொண்டர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, விஜயகாந்த் உடல்நிலை தேறிவிட்டதாக தெரிவித்த மருத்துவமனை, பூரண குணமடைந்து அவர் வீடு திரும்பி விட்டதாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 14ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் விஜயகாந்த் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 14.12.2023 வியாழக்கிழமை காலை 8.45 மணியளவில், சென்னை, திருவேற்காட்டில் உள்ள GPN பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. அதில் தேமுதிக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் கலந்து கொள்கிறார்.
பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறைய வாய்ப்பு: பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!
மேலும், கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்.
இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், தேர்தல் பணி குழு செயலாளர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூராட்சி கழக செயலாளர்கள், மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டில்லி, அந்தமான் ஆகிய மாநில கழக செயலாளர்களும் இப்பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.