
பெரம்பலூர்
பெரம்பலூரில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நாளை தொடங்குகின்றன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்சியர் வே.சாந்தா நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "பெரம்பலூர் மாவட்டத்தில் 2017-2018-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான தடகளம், நீச்சல் மற்றும் குழு போட்டிகள் இருபாலருக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 30-ஆம் தேதி வரை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.
அதன்படி, நாளை தடகளம், கபடி, கைப்பந்து, இறகுப்பந்து, நீச்சல் ஆகிய விளையாட்டு போட்டிகள் இருபாலருக்கும் நடத்தப்பட உள்ளது.
இதில் 100, 800, 5,000 மீட்டர் ஓட்டம், 110 மீட்டர் தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் ஆண்களுக்கு நடைபெறும்.
நூறு, 400, 3000 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் தடைதாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் பெண்களுக்கு நடைபெறும்.
இதேபோல நீச்சல் போட்டிகளும் அன்றே நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 29-ஆம் தேதி அன்று கால்பந்து, கூடைப்பந்து, மேஜைப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் இருபாலருக்கும் நடைபெற உள்ளது. இதில் மேஜைப்பந்து, இறகுப்பந்து விளையாட்டு போட்டிகள் இரண்டு ஒற்றையர் மற்றும் ஒரு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் நடைபெற உள்ளது.
பின்னர், 30-ஆம் தேதி அன்று வளைகோல்பந்து, டென்னிஸ் ஆகிய போட்டிகள் இருபாலருக்கும் நடைபெற உள்ளது. குழு போட்டிகள் அனைத்தும் நாக் ஔட் கம் லீக் முறையில் நடத்தப்பட உள்ளது.
இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் 31.12.2017 அன்று 21 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். பிறந்த தேதிக்கான சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மாவட்ட அளவிலான குழு போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழ்நாட்டில் குறைந்தது ஐந்து வருடங்களாவது வசித்து வருவதற்கான புகைப்படத்துடன் கூடிய குடும்ப அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பள்ளி மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் இவைகளில் ஏதேனும் ஒன்றை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல் பரிசு ரூ.1,000-ம், இரண்டாம் பரிசு ரூ.750-ம், மூன்றாம் பரிசு ரூ.500-ம் வழங்கப்படும். பரிசுத் தொகையினை வங்கியில் நேரடி பரிவர்த்தனை மூலம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
எனவே, போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைவரும் அவசியம் வங்கி கணக்கு புத்தக நகலினை சமர்ப்பிக்க வேண்டும். மாநில அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறும் அணிவீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு தலா ரூ.1 இலட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
எனவே, மாவட்ட அளவிலான போட்டிகளில் அதிக அளவில் வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று அந்தச் செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.