
நீலகிரி
நீலகிரியில், சிறுத்தைப்புலி ஒன்று வளர்ப்பு பிராணிகளைக் கொன்று தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால் அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள படச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் சேரம்பாடி கூட்டுறவு வங்கி தலைவராக உள்ளார். இவர், தனது வீட்டில் சில ஆடுகள் வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் கொட்டகையில் கட்டி வைத்திருந்த ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டதால் சந்திரன் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது, கொட்டகையில் இருந்து சிறுத்தைப்புலி ஒன்று வெளியே ஓடியது.
பின்னர், அருகே சென்று பார்த்தபோது மூன்று வயது பெண் ஆட்டை சிறுத்தைப்புலி கடித்து கொன்றது தெரிய வந்தது.
பின்னர், இதுகுறித்து சேரம்பாடி வனத்துறையினர்களுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அங்கு வந்த சேரம்பாடி வனச்சரகர் கணேசன், வன காப்பாளர் சிவபிரகாசம் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர் பிரபு வரவழைக்கப்பட்டு ஆட்டின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சிறுத்தைப்புலி கடித்து ஆடு இறந்தது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், "இந்தப் பகுதியில் சிறுத்தை புலியின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவில் வளர்ப்பு பிராணிகளை பிடித்து கொன்று வருகிறது. இந்ப் பகுதியில் சிறுத்தைப்புலி அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூண்டு வைத்து சிறுத்தைப்புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் கதறினர்.