
நீலகிரி
நீலகிரியில் உள்ள மத்திய அரசின் எச்.பி.எப். பிலிம் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பத்து மாதங்களாக சம்பளம் தராமலும்,விருப்ப ஓய்வும் மறுக்கப்படுவதாலும் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண தமிழக ஆளுநரை தொழிலாளர்கள் இன்று சந்திக்கின்றனர்.
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான எச்.பி.எப். பிலிம் தொழிற்சாலை கடந்த இருபது வருடங்களுக்கு முன்னர் நலிவடைந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் இந்தத் தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டு, தொழிலாளர்களும் படிப்படியாக வெளியேறி வந்தனர். இதில், விருப்ப ஓய்வுத் திட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர் சுமார் ஐந்தாயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் படிப்படியாகக் குறைந்து கடைசியாக 168 பேர் மட்டுமே உள்ளனர்.
இவர்களுக்கு விருப்ப ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் ஓய்வுக்கான அனுமதி இதுவரையிலும் மறுக்கப்பட்டு வருவதோடு, கடந்த பத்து மாதங்களாக சம்பளம் இல்லாத நிலையும் உண்டாகியுள்ளது.
இதுதொடர்பாக இத்தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும், இதுகுறித்து தொடர்புடைய பல்வேறு அதிகாரிகள், அமைப்புகள் உள்ளிட்டவற்றிலும் கோரிக்கை மனுக்களை கொடுத்து வருகின்றனர்.
இருப்பினும் இந்தப் பிரச்சனைக்கு இதுவரையிலும் தீர்வு காணப்படவில்லை. எனவே, தங்கள் பிரச்சனை தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்துப் பேச அனுமதி கோரி மனு கொடுத்திருந்தனர்.
இந்த மனுவிற்கு ஆளுநர் மாளிகையிலிருந்து தற்போது அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. திங்கள்கிழமை (இன்று) பிற்பகலில் எச்.பி.எப். ஊழியர்களின் பிரதிநிதிகள் ஆளுநரை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகள் தொடர்பாக முறையிடுகின்றனர்.
"தமிழகத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான எச்.பி.எப். பிலிம் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சனைக்கு தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும், தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தாலேயே தாங்கள் ஆளுநரை சந்தித்து முறையிட முடிவெடுத்துள்ளோம்" என்று தொழிற்சாலை ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.