மயிலாடுதுறை டூ அரியலூர்? சிறுத்தையின் அட்ராசிட்டியால் அரியலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

By Velmurugan sFirst Published Apr 12, 2024, 3:50 PM IST
Highlights

அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மருத்துவமனை பின்புறம் நேற்று இரவு சிறுத்தை ஒன்று நடமாடிய நிலையில் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு சிறுத்தையை பிடிக்கும் முயற்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று இரவு திடீரென அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மருத்துவமனை அருகே சிறுத்தை ஒன்று நடமாடுவது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினரும், வருவாய் துறையினரும் மற்றும் காவல் துறையினரும் உடனடியாக அப்பகுதிக்கு சென்று மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர். இன்று காலை செந்துறை, உஞ்சினி, பொன்பரப்பி, சிதலவாடி உள்ளிட்ட நான்கு இடங்களில்  24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வனத்துறையினர், இரண்டு உதவி கால்நடை மருத்துவர்கள், பொள்ளாச்சியில் இருந்து சிறுத்தை நடமாட்ட ஆய்வாளர் உள்ளிட்ட 25 பேர் தற்பொழுது செந்துறை பகுதியில் முகாமிட்டுள்ளனர். 

என்னை கண்டால் பிரதமர் மோடி பயப்படுவார்; பிரசாரத்தில் ஆ.ராசா பரபரப்பு பேச்சு

சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அரியலூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரீ ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார். செந்துறை தாலுகாவில் காலையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் பாதுகாப்புடன் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற பகுதிகளில் மாவட்ட முழுவதும் மதிய உணவு முடித்தவுடன் மாணவர்களை பாதுகாப்புடன் வீடுகளுக்கு அனுப்பி வைக்க பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. 

சிறுத்தை நடமாட்டம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட வன அலுவலர் இளங்கோவன், சிறுத்தை நடமாட்டம் செந்துறை பகுதியில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறுத்தையை பிடிக்க 25 நபர்கள் ஈடுபட்டு வருகிறோம். சிறுத்தை நடமாடிய செந்துறை நகரிலும் மற்றும் அருகிலுள்ள உஞ்சினி, பொன்பரப்பி, சிதலவாடி உள்ளிட்ட பகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மதியத்திற்கு மேல் சிறுத்தையை பிடிக்க கூண்டு, வலை மற்றும் மீட்பு உபகரணங்கள் கொண்டுவரப்படுகிறது. 

ஜிஎஸ்டி குறித்து வேட்பாளரிடம் கேள்வி கேட்ட பெண் மீது சரமாரி தாக்குதல்; திருப்பூரில் பாஜகவினர் அட்டூழியம்

மேலும் சிறுத்தையின் காலடித் தடம் உறுதி செய்யப்பட்ட இடங்களில், கூண்டுகள் வைத்து அதற்குள் பன்றி, ஆடு உள்ளிட்ட உணவுப் பொருட்களை வைத்து, சிறுத்தையை பிடிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறுத்தை நடமாட்டம் குறித்து, பொதுமக்கள் தகவல் அளித்தால், உடனடியாக அப்பகுதிக்கு செல்ல மீட்பு குழுவினர் தயாராக உள்ளனர்.

மயிலாடுதுறையில் காணப்பட்ட சிறுத்தையும், தற்பொழுது செந்துறையில் காணப்பட்ட சிறுத்தையும், ஒன்றா  என்பதை உறுதி செய்ய முடியவில்லை. சிறுத்தை பிடித்த பின்பு அதனுடைய அளவீடுகள் மற்றும் போட்டோவுடன் ஒப்பிட்டு உறுதி செய்யப்படும் என்று கூறினார். 

click me!