
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் சொத்து தகராறில் அண்ணன் - தம்பி இடையே ஏற்பட்ட தகராறை தடுக்கப்போன அண்ணன் மனைவியை, தம்பி கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தம்பியை காவலாளார்கள் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா நாட்டேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கண்ணன் (48). இவரது தம்பி வெங்கடேசன்.
அண்ணன், தம்பிக்கு இடையே வீட்டுமனை சொத்தில் தகராறு இருந்ததால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராற ஏற்பட்டு வந்ததாம்.
இந்த நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் வீட்டுமனை தொடர்பாக அண்ணன், தம்பிக்கு இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் தகராறு முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் சரமாரியாக அடித்துக் கொண்டனர்.
அப்போது கண்ணனுக்கு ஆதரவாக வந்த அவரது மனைவி ராணியை (40) அண்ணி என்றும் பாராமல் வெங்கடேசன் ஆத்திரத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் ராணி, நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்ததும் பிரம்மதேசம் காவல் உதவி ஆய்வாளர் பாக்கியராஜ் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ராணியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பிரம்மதேசம் காவல் ஆய்வாளர் சாரதி (பொறுப்பு) வழக்குப்பதிந்து வெங்கடேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.