
திருவள்ளூர்
முத்தலாக் தடைச் சட்டத்தை கொண்டுவர ஆர்வம் காட்டும் மத்திய அரசு பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீடு சட்டத்தை கொண்டுவராதது ஏன்? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
திருவள்ளூர் மாவட்டம், சுங்கச்சாவடி அருகே ஈத்கா மைதானத்தில் பெண்கள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் ஷரியத் சட்டத்தில் கைவைக்கும் மத்திய அரசைக் கண்டித்து பொதுக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு ஜமா அதுல் உலமா சபையின் கெளரவ தலைவர் எம்.எம்.எஸ்.ஹாஸ் மிஸ்பாஹ் ரஷீத் ஹஸ்ரத் தலைமை தாங்கினார். மாநில ஜமாஅதுல் உலமா சபை வழிகாட்டுக் குழு உறுப்பினர் ஜி.எம்.தர்வேஷ் ரஷாதி ஹஸ்ரத் முன்னிலை வகித்தார்.
இதில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம், "முஸ்லிம்களின் ஷரியத் சட்டமான முத்தலாக் தடைச் சட்டத்தை கொண்டு வருவதில் ஏன் ஆர்வம் காட்டுகின்றனர்? அதற்குக் காரணம் முஸ்லிம்களை பலி வாங்கும் நோக்கம்தான்.
இதை முஸ்லிம்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும். பெண்கள் வழக்குத் தொடுத்ததால்தான் சட்டம் கொண்டு வருவதாகக் கூறும் மத்திய அரசு ஏன், இதுவரையில் பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீடு சட்ட மசோதாவை கொண்டு வரவில்லை? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கூட்டத்தில், ஜமாஅதுல் உலமா சபை தலைவர் ஜி.எச்.முஹம்மது ஹாரிஸ் ஹஸனி, மேற்கு மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாஅத் ஒருங்கிணைப்பு கமிட் டி தலைவர் எம்.சீனி ஹாத்தீம் கனி, மேற்கு மாவட்ட இந்திய முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் காயல் அஹ்மது சாலிஹ், பி.எஃப்.ஐ மாவட்ட தலைவர் அஹ்மது பாஷா ஆகியோர் பங்கேற்றனர்.