
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில், இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அகரம் ஊராட்சியினர் தொடர்ந்து 3-வது நாளாக தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பதை அறிந்த ஆட்சியர் தீர்வு காண அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
காஞ்சிபுரத்தை மாவட்டம், கோவிந்தவாடி அகரம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி கடந்த 1961-ல் கட்டப்பட்டது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், நீர்நிலை புறம்போக்கு, பட்டா பிரச்சனை, அடிப்படை வசதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புதிய கட்டடம் கட்டுவதற்கு ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, காஞ்சிபுரம் - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலைக்கு அருகே சுமார் இரண்டு ஏக்கருக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட இடத்தில் பள்ளி கட்டுவதற்கும் நபார்டு வங்கி ரூ.3 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கியது.
புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகளும் சமீபத்தில் தொடங்கப்பட்டது. ஆனால், தற்போது இருக்கும் இடத்திலேயே புதிய கட்டடம் கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஒரு பிரிவினரும், புதிய இடத்திலேயே பள்ளி கட்டடம் கட்டவேண்டும் என்று மற்றொரு பிரிவினரும் வேறுபாடான கருத்து தெரிவித்து வந்தனர். இதனால், புதிய கட்டடம் கட்டும் பணிகள் தற்காலிகமாக முடங்கின.
இந்த நிலையில், புதிய கட்டடம் கட்டவேண்டும் என்று கோரும் ஒரு பிரிவினர், தங்களது குழந்தைகளை திங்கள்கிழமையில் இருந்து தொடர்ந்து மூன்று நாள்கள் வரை பள்ளிக்கு அனுப்பவில்லை. இதனால், கடந்த 3 நாள்களாக கோவிந்தவாடி அகரம் மேல்நிலைப்பள்ளி, மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இந்தப் பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன்படி, நேற்று காலை ஆட்சியர் பா.பொன்னையா கோவிந்தவாடி அகரம் ஊராட்சிக்கு நேரில் சென்று, மாணவர்கள் பள்ளிக்கு வராதது குறித்து ஆய்வு நடத்தினார். மேலும், அந்த ஊராட்சியினரிடம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வலியுறுத்தி, ஆலோசனை செய்தார்.
அதன்படி, பள்ளிக்கு வராத அனைத்து குழந்தைகளும் வியாழக்கிழமை (அதாவது இன்று) முதல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தினார். அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளார்.