பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது.. மெட்ரிகுலேசன் இயக்குநரகம் எச்சரிக்கை !

By Raghupati RFirst Published Jul 17, 2022, 9:03 PM IST
Highlights

நாளை முதல் தமிழகத்தில் அனைத்து தனியார் மெட்ரிக்குலேசன், நர்சரி, சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்படாது என்று தமிழ்நாடு மெட்ரிக்குலேசன், நர்சரி, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த ஸ்ரீமதி என்ற பள்ளி மாணவி கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஸ்ரீமதியின் பெற்றோர் தனது மகள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இதனை தொடர்ந்து போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை காவல்துறை சார்பில் வீடியோ பதிவும் செய்யப்பட்டது. இந்த நிலையில் உயிரிழந்த ஸ்ரீமதியின் மரணத்துக்கு நீதிக்கேட்டு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டம் மாணவர்களின் எழுச்சி போராட்டமாக மாறி கலவரமாக வெடித்தது.

மேலும் செய்திகளுக்கு..3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கப்போகுது.. மக்களே உஷார் !

கனியாமூர் தனியார் பள்ளியில் நடந்த வன்முறைச் சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக, நாளை (18/07/2022) முதல் தமிழகத்தில் அனைத்து தனியார் மெட்ரிக்குலேசன், நர்சரி, சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்படாது என்று தமிழ்நாடு மெட்ரிக்குலேசன், நர்சரி, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் மெட்ரிகுலேசன் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தனியார் பள்ளிகள் இயங்காது என எவ்வித முன் அனுமதியும் பெறவில்லை. தனியார் பள்ளிகள் மூடப்படுவதாக இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. முன் அனுமதி பெறாமல் விடுமுறை அளித்தால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுப்பர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்? பதவி தான் முக்கியமா? திமுகவை பொளந்த அண்ணாமலை

click me!