நான் எங்கும் ஓடி ஒழியவோ, மறைந்து கொள்ளவோ இல்லை..! என் மீது சந்தேக நிழல் விழுவது தப்பில்லை- இயக்குனர் அமீர்

By Ajmal KhanFirst Published Apr 10, 2024, 11:02 AM IST
Highlights

என் மீதான குற்றச்சாட்டும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நிருபிப்பேன், விரைவில் இது குறித்து ஒருநாள் பேசுவேன்,  நான் இப்போதும் சொல்கிறேன் எந்த விசாரணைக்கும் நான் தயார் என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். 
 

அமீர் வீட்டில் திடீர் சோதனை

2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தப்பட்ட குற்றச்சாட்டில் முன்னாள் திமுக நிர்வாகியும், தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இவரது தயாரிப்பில் இயக்குனர் அமீர் இறைவன் பெரியவன் என்ற திரைப்படத்தையும் இயக்கி வந்தார். இந்தநிலையில் ஜாபர் சாதிக்கோடு இயக்குனர் அமீர் தொடர்பில் இருந்த காரணத்தால் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் டெல்லிக்கு அழைத்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து நேற்று அமீர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு திடல் தொழுகையி்ல் இயக்குனர் அமீர் கலந்துகொண்டார்.  


இதனை தொடர்ந்து செய்தியாளர்களை இயக்குனர் அமீர் சந்தித்தார் அப்போது அவர்,  ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பு நோற்று முடித்து இன்று ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியோடு் கொண்டாடுகிறோம் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார். இதையடுத்து  அமலாக்கத்துறை சோதனையில் வீட்டல் இருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்ற கேள்விக்கு பதில்  பதில் அளித்த அவர், என்ன எடுத்தார்கள் என்று சொல்ல முடியாது, NCB 11 மணி நேர விசாரணை மற்றும் ED ரெய்டு நடந்தது உண்மைதான் ஆனால் என்ன எடுத்துள்ளார்கள் அவர்கள் தான் சொல்ல வேண்டும், இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்து நான் சொல்வது ஒன்றுதான் எந்த விசாரணைக்கும் நான் தயார். என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு எனக்கும் எந்த தொடர்பு இல்லை என்பதை நிருபிப்பேன். இறைவன் மிகப்பெரியவன் என்பது தான் என்னிடம் வரும் வார்த்தை என கூறினார். 

சந்தேக நிழல் விழுவதில் தப்பில்லை

போதை தடுப்பு துறையின் விசாரணை எனக்கு ஒரு புதிய அனுபவம் தான்.  என்னோடு பயணித்த ஒரு நபர் மீது இவ்வளவு பெரிய குற்றம் உள்ளது. குற்றப் பின்னணி உள்ளது என்ற நிலையில் என் மீது சந்தேக நிழல் விழுவதில் தப்பில்லை. என் மீது சந்தேகமே படக்கூடாது என சொல்லக்கூடாது. குற்றப்பின்னனி ஒருவருடன் பயணித்தேன் என்ற காரணத்தால் என்னிடம் விசாரிப்பதில் நியாயம் உள்ளது. ஆனால் என்னை மட்டும் நோக்கி வரும் போது சில சிக்கல்கள் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எதுவும் அறியாதவர்கள், தங்கள் இஷ்டத்திற்கு சமூகவலைதளத்தில் கதை சொல்கிறார்கள். அது அனைத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி விரைவில் வரும் என தெரிவித்தார். 

ஒரு நாள் முழுமையாக பேசுவேன்..

உங்களை டார்கெட் செய்து விசாரணை நடைபெறுகிறதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், உறுதியாக சொல்ல முடியாது இது குறித்து உறுதியாக ஒரு நாள் பேசுவேன் என தெரிவித்தார். அமலாக்கத்துறை சோதனையில் உள்நோக்கம் உண்டா? என்ற கேள்விக்கு, இதனை உறுதியாக சொல்ல முடியாது ஆனால் என்னால் ஒரு மாதமாக பேச முடியவில்லை என்பது உண்மை, இறைவன் மிகப்பெரியவன் என சொல்லிக்கொண்டு கடந்து போறவன் நான் என தெரிவித்தார்.

அமலாக்கத்துறை விசாரணை நேர்மையாக உள்ளதா? என்ற கேள்விக்கு, விசாரணை நேர்மையாக நடைபெறுகிறது. விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா இல்லையா என்பது எனக்கு தெரியாது, நேற்று இரவு ED சோதனை முடிவடைந்தது .  விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே இது குறித்து முழுமையாக பேச கொஞ்சம் நேரம் தாருங்கள் என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

பறவைகள் சரணாலயத்துக்கு வருவது போல், தேர்தல் காலங்களில் தமிழ்நாட்டில் வட்டமடிக்கும் மோடி.! விளாசும் ஸ்டாலின்

click me!