காருக்கு பதிலாக அரசு வேலை கொடுங்க... ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர்களுக்கு ஆதரவாக களம் இறங்கிய இயக்குனர் அமீர்

By Ajmal Khan  |  First Published Jan 18, 2024, 10:07 AM IST

மத்திய அரசிடமும், உச்சநீதிமன்றத்திடமும் போராடிப் பெற்ற நமது கலாசார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழக அரசின் அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என இயக்குனர் அமீர் கோரிக்கை விடுத்துள்ளார். 


ஜல்லிக்கட்டு போட்டி-அமீர் கடிதம்

பொங்கல் பண்டிகை வந்துவிட்டாலே,  ஜல்லிக்கட்டுப்போட்டிகள்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். தமிழர்களுடைய வீரத்தை நிரூபிக்கும் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள் தங்களுக்கு காருக்கு பதிலாக அரசு வேலை வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தநிலையில் இயக்குனர் அமீர், தமிழக முதல்வர், மற்றும் அமைச்சர் உதயநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  

Tap to resize

Latest Videos

திக்கெட்டும் திகழ் ஒளி வீசி தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்து வரும் தாங்கள், தமிழின் தலைநகராம் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கென சிறப்பாக,  “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” என்ற மைதானம் ஒன்றை தங்கள் திருக்கரங்களில் திறக்கவிருக்கும் இவ்வேளையில், ”தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத் தெரிபு தெரிபு குத்தின ஏறு.. கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும்  புல்லாளே ஆய மகள்..”

அரசு பணி வழங்கிடுக

என்று கலித்தொகை பறைசாற்றும் பாரம்பரியமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்று, ஒன்றிய அரசிடமும், உச்சநீதிமன்றத்திடமும் போராடிப் பெற்ற நமது கலாசார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழக அரசின் அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க கோருகிறேன். மேலும், இன்று மதுரை அலங்காநல்லூரிலும், கடந்த இரு தினங்களாக அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளிளும் வெற்றி பெற்ற வீரர்கள் அரசுப்பணி கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்த இனிய தருணத்தில் அவர்களது கோரிக்கையை தாங்கள் கனிவோடு கவனித்து ஆவன செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.

பொன்னெழுத்தில் பொறிக்கப்படும்

”தமிழர் வீரம் வீணாகாது – தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல.!” என்பதை உலகிற்கு சொல்லும் செய்தியாக இது அமைவதோடு, தமிழர் தம் நெடிய வரலாற்றில் தங்களது இச்செயல் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு வரலாற்றில் வைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை முன்வைக்கிறேன் என இயக்குனர் அமீர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

படம் வெளியாகும் போது அவ்வளவு அழுத்தம் இருந்தது! 'மிஷன் சாப்டர்1' வெற்றி விழாவில் அருண் விஜய் உருக்கம்!

click me!