ரூ.16,000 முதலீடு செய்யும் வின்ஃபாஸ்ட் நிறுவனம்: ஆய்வு செய்ததா தமிழக அரசு? பாஜக கேள்வி!

Published : Jan 07, 2024, 10:58 AM IST
ரூ.16,000 முதலீடு செய்யும் வின்ஃபாஸ்ட் நிறுவனம்: ஆய்வு செய்ததா தமிழக அரசு? பாஜக கேள்வி!

சுருக்கம்

தமிழ்நாட்டில் ரூ.16000 கோடி முதலீடு செய்யவுள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனம் குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ததா என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது

2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாகத் தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்ற உயரிய கொள்கையை நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அதன் ஒருபகுதியாக, உலக அளவில் மிகப் பெரிய நிறுவனங்களையும், முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையில், தமிழகத்தில் இன்றும், நாளையும் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறுகிறது.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில், உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட், தமிழ்நாட்டில் ரூ.16000 கோடி முதலீடு செய்யும் ஒப்பந்தந்தில் கையெழுத்திடவுள்ளது.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் #EVCar மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை VinFast நிறுவனம் அமைக்கவுள்ளது.

இது வெறும் முதலீடு அல்ல; தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல்! தமிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தாருக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எனது மனமார்ந்த நன்றிகள்! #TNGIM2024-இல் இன்னும் இதுபோன்ற பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள்!” என பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் ரூ.16000 கோடி முதலீடு செய்யவுள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனம் குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ததா என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான VinFast நிறுவனம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் EVCar மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை VinFast நிறுவனம் அமைக்கவுள்ளது. இது வெறும் முதலீடு அல்ல; தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல்! தமிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளும் VinFast நிறுவனத்தாருக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக எனது மனமார்ந்த நன்றிகள்! என்று குறிப்பிட்டுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் அந்நிய நிறுவனங்களின் முதலீடுகள் வரவேற்கப்பட வேண்டிய அதே நேரத்தில், புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள் குறித்த முழு விவரங்களையும் அரசு அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் பெரும் நிதி இழப்பை சந்தித்துள்ளது இந்த நிறுவனம்.

உத்தரகாண்டில் ஜனவரி முதல் பொது சிவில் சட்டம் அமல்!

வியட்நாம் நாட்டை சேர்ந்த VinFast நிறுவனம் பல்வேறு துறைகளில் இருந்தாலும், சொந்த நாட்டிலேயே டெஸ்லா கார் நிறுவனத்துடன் போட்டி போட முடியாத நிலையில் உள்ளது. அதன் நிறுவனத்தில் உற்பத்தியாகும்  பெரும்பாலான வாகனங்களை அதே நிறுவனத்தின் வாடகை கார் நிறுவனமே கொள்முதல் செய்து கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் பங்கு சந்தையில் தங்களின் பங்கு விலையை மிகைப்படுத்தி வர்த்தகம் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. பங்கு சந்தையில் நுழைந்த ஒரு சில நாட்களிலேயே இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் 230 பில்லியன் டாலர்களுக்கு விறு விறுவென்று உயர்ந்த நிலையில் 32 வது நாளில் 17 பில்லியன் டாலராக வீழ்ந்தது. கடந்த ஆகஸ்ட் 2023 அன்று 90 டாலராக இருந்த ஒரு பங்கின் விலை இன்று 7 டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.  

மின்சார வாகன சந்தை என்பது வேகமாக வளர்ச்சி பெறுகிற நிலையில், முதலீடு செய்யும் நிறுவனம்  தரமான வாகனங்களை வழங்குமா? உறுதி செய்கிற முதலீடுகளை செய்வதற்கு போதுமான நிதி ஆதாரம் உள்ளதா? இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இதன் சந்தை எப்படி உள்ளது? எப்படி இருக்கும்? என்பது  போன்ற ஆய்வுகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளதா என்பதற்கான ஆய்வுகளோ, தரவுககளோ இல்லை. மேலும், நம் நாட்டில் வேறு ஏதேனும் நிறுவனங்களுடன் இணைந்து செய்லபடப்போகிறதா என்பது போன்ற விவரங்கள் தெரியாத நிலையில், பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் இக்கட்டான இந்நேரத்தில், நம் மாநிலத்தில் துவங்குவதாக சொல்லப்படும் நிறுவனம் நிலைத்து நிற்க கூடிய நிறுவனம் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது தமிழக அரசின்  கடமை. 

இந்த துறை தொடர்புடைய வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து, அந்த நிறுவனத்தின் பலம், பலவீனம் ஆகியவற்றை  ஆய்வு செய்து, அதற்கேற்ப இந்த விவகாரத்தில்  முதலமைச்சர் செயல்பட வேண்டும் என்பதே நமது கோரிக்கை. பல்வேறு சர்ச்சைகள் உள்ள இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் தாமதமானாலோ, முயற்சிகள் தோல்வியடைந்தாலோ எதிர்காலத்தில் வேகமாக வளரக்கூடிய இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள பெரிய மின்சார வாகன நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க தயங்கக்கூடாது என்பதால் தான் அரசியல் ரீதியாக அல்லாமல், தமிழகத்தின் நலன் கருதி இந்த கருத்தை நான் முன்வைக்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!