
தனியார் நிறுவனங்களின் பாலில் ரசாயனப் பொருட்கள் கலப்படம் செய்யப்படுகிறது என பரபரப்பு குற்றம்சாட்டி வரும் தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புனேவுக்கு தனியார் பால் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாக சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில் புனேயில் உள்ள மத்தியஅரசின் அரசு சுகாதார ஆய்வுகத்துக்குதமிழக அரசு சார்பில் எந்த விதமான பால்மாதிரிகளும் வந்து சேரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்துக்கு கடைசியாக தமிழகத்தில் இருந்து கடந்த 2016ம் ஆண்டு ஈரோட்டில் இருந்து ஒரு தனியார் பால் நிறுவனம் மட்டுமே மாதிரிகளை அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த சில நாட்களாக தனியார் பால் நிறுவனங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்து வருகிறார். தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலில் ரசாயனப் பொடிகள் கலக்கப்படுவதாகவும், இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் புற்றுநோய் வரும் என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
தனியார் பால் பாக்கெட்டுகள் கெட்டுப்போகாமல் இருக்க ரசாயனங்கள் கலக்கப்படுவதாகவும் இதன் காரணமாகவே பால் பாக்கெட்டுகள் 10 நாட்கள் வரை கெடாமல் இருப்பதாக குற்றம் சாட்டினார், மேலும், தனியார் நிறுவனங்கள் தயிரையே பாலாக்குவதாகவும் ராஜேந்திர பாலாஜி தனியார் நிறுவனங்கள் மீது குண்டை தூக்கிப் போட்டார்.
இந்த குற்றச்சாட்டை நான் நிரூபிக்காவிட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகிவிடுகிறேன் என்றும் தூக்கில் தொங்குவேன் என்றும் அமைச்சர் பாலாஜிஉருக்கமாகப் பேசினார்.
மேலும், தனியார் நிறுவனங்களின் பால் புனேவுக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஆய்வு முடிவுக்குப் பிறகு கலப்படம் செய்யும் பால் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார்.
இந்நிலையில், புனேயில் உள்ள மத்திய அரசுக்கு கட்டுப்பட்ட உணவுப்பாதுகாப்பு சுகாதார ஆய்வகத்தின் இயக்குநர் டி.டி. பட்கேரிவிடம் தொலைபேசி மூலம் தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட பால் மாதிரிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் கூறுகையில், “ தமிழக அரசில் இருந்து எந்த விதமான பால் மாதிரியும் ஆய்வுக்கு அனுப்பப்படவில்லை. தமிழகத்தில் இருந்து கடைசியாக கடந்த 2016ம் ஆண்டு ஆய்வுக்கு பால் மாதிரிகள் வந்தன. அதுவும் ஈரோட்டில் இருந்து ஒரு தனியார் நிறுவனம் அனுப்பி இருந்தது. அந்த பால் மாதிரியிலும் எந்தவிதமான ரசாயன பொருட்கள் கலக்காமல் இருந்தது. அதன்பின் இப்போது வரை எந்தவிதமான பால்மாதிரிகளும் தமிழகத்தில் இருந்து வரவில்லை. தென் மாநிலங்களில் இருக்கும் மத்திய அரசு சார்பான ஆய்வு நிறுவனம் இது ஒன்று தான். தமிழகத்தில் இருந்து அனைத்து உணவு மாதிரிகளும் இங்கு தான் ஆய்வுக்கு வரும். ஆனால், இப்போதுவவை பால் மாதிரிகள் வரவில்லை.’’ எனத் தெரிவித்தார்.
தயிரை மீண்டும் பாலாக்க முடியுமா? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், “ தயிரை ஒருபோதும் பாலாக்க முடியாது. ஆனால், சில வேதிப்பொருட்களை கலந்து தயிர் கெட்டுப்போகாமல் பாதுகாக்க முடியும். ஆனால் பால் கெட்டுப்போனால் எதுவும் செய்யமுடியாது’’ எனத் தெரிவித்தார்.
ஆனால், கடந்த வாரம் ஊடகங்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் பால் நிறுவனங்களின் பால் மாதிரிகள் ஆய்வுக்காக மத்திய அரசின் புனேஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.தனியார் நிறுவனங்களின் பாலில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனப் பொருட்கள் கலந்து இருப்பதாக சந்தேகிக்கிறோம் என்று தெரிவித்து இருந்தார்.
புனே ஆய்வகத்துக்கு தமிழக அரசு சார்பில் எந்தவிதமான பால் மாதிரிகளும் இதுவரை அனுப்பாத நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எவ்வாறு இது போல் அனுப்பப்பட்டதாகக் கூறினார்?, அவ்வாறு கூற வேண்டிய காரணம என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அப்படியானால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால்நிறுவனங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உள்நோக்கத்தில் வீசப்படுகிறதா? என்ற வினா எழுகிறது.